ஆன்லைன் ரம்மியை தடைசெய்தால் அந்த விளம்பரத்தில் நடிக்க மாட்டேன்

ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அந்த விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

Update: 2022-10-03 18:28 GMT

திருவட்டார், 

ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அந்த விளம்பரத்தில் நடிக்கமாட்டேன் என நடிகர் சரத்குமார் தெரிவித்தார்.

சரத்குமார் தரிசனம்

சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நேற்று திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி ஆதிகேசவ பெருமாளை அவர் தனது குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர், நட்சத்திரம் ஆகியவற்றை அர்ச்சகரிடம் கூறி தரிசனம் செய்தார். இதனை தொடர்ந்து கோவிலை சுற்றி வலம் வந்து அதன் சிறப்புகளை கேட்டறிந்தார்.

பேட்டி

பின்னர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தற்போது ஆழி என்ற படத்தில் நடித்து வருகிறேன். இந்த கோவிலை பார்க்கும் போது திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலைப் போலவே உள்ளது. கோவிலின் பிரமாண்டம் மெய்சிலிர்க்க வைக்கிறது. ஆதிகேசவ பெருமாளை மனம் நிறைய மகிழ்ச்சியுடன் தரிசனம் செய்தேன். கோவிலின் கருவறையைச் சுற்றி வரையப்பட்ட ஓவியங்கள் முழுமை பெறாமல் உள்ளன. அதை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவேன்.

நடிகர் சங்க பிரச்சினை

நடிகர் சங்க பிரச்சினை பற்றி பேச விரும்பவில்லை. பொன்னியின் செல்வன் படத்தில் நான் நடித்த பெரிய பழுவேட்டரையர் பாத்திரம் மிகப்பெரிய மையப்பாத்திரம். எனது கதாபாத்திரம் மக்களிடையே பேசப்படுவது மகிழ்ச்சியை தருகிறது. அதில் நடிக்க வாய்ப்பு தந்த இயக்குனர் மணிரத்தினத்துக்கு நன்றி. படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

சமத்துவ மக்கள் கட்சி அமைதியாக இருப்பதாக சொல்கிறீர்கள். அமைதியாக இருக்கும் நதிதான் ஆழமாக இருக்கும்.

ஆன்லைன் ரம்மி விளம்பரம்

ஆன்லைன் ரம்மியை தடை செய்யப்பட்ட பிறகு நான் இந்த மாதிரி விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்துகிறேன். மதுபழக்கம் குடியை கெடுக்கும் என்கிறார்கள். ஆனால் டாஸ்மாக் கடை செயல்படுகிறது. மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளை அரசு தடை செய்ய வேண்டும்.

இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்த கருத்து பற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும். இது சுதந்திரநாடு. யாருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாநில ச.ம.க. துணை பொதுச்செயலாளர் சுந்தர், மாவட்ட செயலாளர் ஜெயராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்