கொற்கை வீரட்டேஸ்வரர் கோவில் சிலையை அமெரிக்காவில் இருந்து மீட்க நடவடிக்கை
மயிலாடுதுறை அருகே உள்ள கொற்கை வீரட்டேஸ்வரர் கோவில் சிலையை அமெரிக்காவில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
மயிலாடுதுறை அருகே உள்ள கொற்கை வீரட்டேஸ்வரர் கோவில் சிலையை அமெரிக்காவில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.
தட்சிணாமூர்த்தி சிலை
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள கொற்கை கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான ஞானாம்பிகை சமேத யோகீஸ்வரர் எனும் வீரட்டேஸ்வரர் கோவில் உள்ளது.
சிவ பெருமானின் வீர திருவிளையாடல்கள் நடந்த அட்டவீரட்ட தலங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு சொந்தமான வீணாதார தட்சிணாமூர்த்தி உலோக சிலை கடந்த 1970-ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் உள்ள கிலீவ்லாண்டு அருங்காட்சியகத்தில் இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்க அருங்காட்சியகத்தில்...
அந்த அருங்காட்சியகத்தின் வலைதளம் மூலம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வீணாதார தட்சிணாமூர்த்தி உலோக சிலை அங்கு இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
இந்தோ-பிரென்ச் இன்ஸ்டியூட் ஆப் பாண்டிச்சேரி என்ற அமைப்பால் இக்கோவிலில் 1958-ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்துடன், கிலீவ்லாண்டு அருங்காட்சியகத்தில் உள்ள வீணாதார தட்சிணாமூர்த்தி சிலையின் புகைப்படத்தை ஒப்பிட்டு பார்த்தபோது இரண்டும் ஒன்று என தெரியவந்துள்ளது.
கடத்தல்
இதனை தொடர்ந்து சிலை திருட்டு தடுப்பு பிரிவு தனிப்படையினர் நடத்திய விசாரணையில், வீணாதார தட்சிணாமூர்த்தி சிலை கோவிலில் இருந்து திருடப்பட்டு வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது உறுதியானது.
இந்த சிலை திருடப்பட்டது தொடர்பாக சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விசாரணை
இந்த நிலையில் திருச்சி சிலை திருட்டு தடுப்பு பிரிவு கூடுதல் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் கும்பகோணம் சிலை தடுப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட 15 பேர் கொண்ட குழுவினர் கொற்கை வீரட்டேஸ்வரர் கோவிலில் நேற்று விசாரணை நடத்தினர்.
அப்போது கோவிலில் இருந்த 30-க்கும் மேற்பட்ட சிலைகளை ஆய்வு செய்து, சிலைகளின் எண்ணிக்கை மற்றும் அதன் உண்மை தன்மை குறித்து கோவில் நிர்வாகத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
மீட்க நடவடிக்கை
வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட வீணாதார தட்சிணாமூர்த்தி சிலை கொற்கை யோகீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான சிலை என்பதை மேலும் உறுதிப்படுத்திக்கொண்டு, வெளிநாட்டு கலை பண்பாட்டு துறை புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் அந்த சிலையை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தெரிவித்தார்.