எண்ணெய் நிறுவனத்துக்கு ரூ.7 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்: யூடியூபருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

அவதூறு வீடியோ வெளியிட்டதற்காக எண்ணெய் நிறுவனத்துக்கு ரூ.7 லட்சம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் யூடியூபருக்கு ஐகோர்ட்டு உத்தரவு.

Update: 2023-10-02 18:47 GMT

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், காளீஸ்வரி ரிபைனரி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ''கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக கோல்டு வின்னர் என்ற பெயரில் சமையல் எண்ணெய் விற்பனை செய்து வருகிறோம். இதற்கு சந்தையிலும், பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பும், நற்பெயரும் உள்ளது. இந்தநிலையில், டிகாப்ஸ்கூப் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் அக்சய் என்பவர் கோல்டு வின்னர் எண்ணெய் பாக்கெட்டின் அளவு குறித்து அவதூறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். எனவே, வீடியோ பதிவை அகற்றவும், அவதூறு பரப்பியதற்காக ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கவும் அவருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் விஜயன் சுப்பிரமணியன் ஆஜராகி, ''யூடியூப் நடத்தும் சிலர் ஆதாரம் இல்லாமல் கண் மூடித்தனமாக யார் மீது வேண்டுமானாலும் அவதூறு பரப்பலாம் என்ற விதத்தில் செயல் படுகின்றனர். அதுபோல செயல்பட்ட, மனுதாரர் நிறுவனத்தை அவதூறு செய்ததற்காக உரிய நஷ்டஈடு வழங்கும்படி எதிர்மனுதாரருக்கு உத்தரவிட வேண்டும்'' என்று வாதிட்டார். விசாரணையின்போது, எதிர்மனுதாரரோ, அவர் சார்பில் வக்கீலோ ஆஜராகவில்லை. இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த (எக்ஸ்பார்ட்டி) உத்தரவில், ''அவதூறு வீடியோ வெளியிட்டதற்காக மனுதாரருக்கு, எதிர்மனுதாரர் ரூ.7 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்