தொழில் பூங்கா தொடங்க மத்திய மந்திரியிடம் வலியுறுத்துவேன்
விருதுநகர் அருகே அறிவிக்கப்பட்ட தொழில் பூங்கா தொடங்க மத்திய மந்திரியிடம் வலியுறுத்துவேன் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
விருதுநகர் அருகே அறிவிக்கப்பட்ட தொழில் பூங்கா தொடங்க மத்திய மந்திரியிடம் வலியுறுத்துவேன் என மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
வெற்றி வாய்ப்பு
விருதுநகர் அருகே வடமலைகுறிச்சி கிராமத்தில் 100 நாள் திட்ட பயனாளிகளிடம் மாணிக்கம் தாகூர் எம்.பி. குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கர்நாடக சட்டமன்ற தேர்தலை பொறுத்தமட்டில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. காங்கிரஸ் கட்சி அறிவித்த பல்வேறு திட்டங்கள் மாநில மக்களுக்கு ஏற்புடையதாக இருந்துள்ளது. எனவே பணபலம், மத அரசியல் மற்றும் தேர்தல் கமிஷனின் நடவடிக்கை ஆகியவற்றை மீறி கர்நாடகத்தில் காங்கிரஸ் மிகப் பெரிய வெற்றியை பெறும்.
தமிழக அமைச்சரவை மாற்றத்தில் விருதுநகர் மாவட்டத்தின் அமைச்சர் தங்கம் தென்னரசு நிதி பொறுப்பை ஏற்றுள்ளது மாவட்டத்திற்கு பெருமையளிக்கிறது. மேலும் டெல்டா மாவட்டத்திற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் இளைஞர் டி.ஆர்.பி. ராஜாவுக்கு தொழில்துறை வழங்கப்பட்டுள்ளது வரவேற்புக்குரியது.
தொழில் பூங்கா
பி.டி.ஆர். பழனிவேல் தியாக ராஜன் இலாகாமாற்றம் அவரது ஆடியோ சர்ச்சை அடிப்படையில் என்று கூறுவது ஏற்புடையது அல்ல. இதற்கு ஏற்கனவே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 2,400 கோடி மதிப்பீட்டில் தொழில்பூங்கா தொடங்கப்படும் என்று மத்திய தொழில் மந்திரி பியூஷ்கோயல் அறிவித்துள்ளது குறித்து மத்திய இணை மந்திரி முருகனிடம் விவாதித்துள்ளேன். தற்போது மத்திய மந்திரி பியூஷ் கோயலை சந்தித்து இத்திட்ட செயல்பாடு மற்றும் விரைவில் தொடங்குவதற்கான நடவடிக்கை குறித்து விவாதிக்க உள்ளேன்.
குடிநீர் பிரச்சினை
விருதுநகர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஜவுளி பூங்காவில் திட்ட பணிகளை ஒருங்கிணைக்க அதிகாரியை நியமிக்க வேண்டும். மாவட்டத்தில் ஆனைக்குட்டம் புனரமைப்புக்கு ரூ. 49 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல் ெரயில்வே மேம்பாலங்கள் தொடர்பான வழக்குகள் முடிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும். மாவட்டத்தில் கோடைகால குடிநீர் பிரச்சினையை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மீனாட்சி சுந்தரம், சிவகுருநாதன், வக்கீல் சீனிவாசன், சிவஞானபுரம் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஆவுடையம்மாள் ஆகியோர் உடனிருந்தனர்.