என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் விடமாட்டேன்: அண்ணாமலை ஆவேசம்

சி.வி. சண்முகம் அமைச்சராக இருந்ததே வசூல் செய்யத்தான். சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு முன்பு ஒரு விதமாகவும் பின்பு வேறு விதமாகவும் பேசுவார் என்று அண்ணாமலை காட்டமாக சாடியுள்ளார்.

Update: 2023-09-17 11:13 GMT

சென்னை,

கடந்த சில மாதங்களாக அதிமுகவுக்கும், பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 11 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் அண்ணாமலை கடுமையாக அண்ணாதுரையை விமர்சித்திருந்தார்.

அண்ணாமலை பேசுகையில், " 1956 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் 10 நாட்கள் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாட்டின் 4ஆம் நாளன்று அழைக்கப்படாத நிலையில் அங்கு வந்த அண்ணாதுரை, பார்வதி தேவியை விமர்சித்திருந்தார். அடுத்த நாள் மேடைக்கு வந்த முத்துராமலிங்கத் தேவர், சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து பார்வதி தேவியை பேசியது யார் என கேள்வி எழுப்பினார். எல்லாரும் நெளிந்தனர். அண்ணாதுரையை மதுரையில் ஒளித்து வைத்திருந்தார்கள். அவரால் வெளியே செல்ல முடியாத நிலை இருந்தது. மதுரை மீனாட்சி அம்மனுக்கு இதுவரை பாலில்தான் அபிஷேகம் நடந்திருக்கிறது. மீண்டும் ஒரு முறை பார்வதி தேவி குறித்து கடவுளை நம்ப மறுப்போர் பேசினால் ரத்த அபிஷேகம் நடக்கும் என கூறியிருந்தார். இதையடுத்து முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தார் அண்ணாதுரை" என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அண்ணாமலையின் இந்த பேச்சுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜு ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் கூறுகையில் பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் தமிழகம் இல்லை, அண்ணாமலையின் வயது 40 கூட இன்னும் முடியவில்லை. 1951-இல் மதுரையில் அண்ணா பேசியதாக ஒரு சம்பவத்தை கூறுகிறீர்கள். அந்த சம்பவத்திற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ, உங்களை நீங்கள் அறிவு ஜீவியாக நினைத்துக் கொண்டு எல்லாம் தெரியும் என பேசி உள்ளீர்கள். அந்த சம்பவம் நடந்து 74 ஆண்டுகள் ஆகிறது, உங்கள் வயது 40. அப்போது உங்களுடைய அப்பா அம்மாக்கு திருமணம் ஆகி இருக்காது. இவ்வாறு சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.

இதற்கு அண்ணாமலை இன்று பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சி.வி. சண்முகம் அமைச்சராக இருந்ததே வசூல் செய்யத்தான். சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு முன்பு ஒரு விதமாகவும் பின்பு வேறு விதமாகவும் பேசுவார். 10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை என்னுடையது. என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் விடமாட்டேன். அண்ணா குறித்து நான் கூறிய கருத்துகள் உண்மை. அதிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன் என தெரிவித்திருந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்