'தமிழகத்தில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைப்பேன்' கவர்னர் தமிழிசை பேச்சு

தமிழகத்தில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது என்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை கூறினார்.

Update: 2022-10-20 21:22 GMT

செனனை,

தெலுங்கானா மாநில கவர்னர் மற்றும் புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் 3 ஆண்டுகள் கவர்னர் பணியை நிறைவு செய்துவிட்டு, 4-வது ஆண்டு பணியை தொடங்கி உள்ள நிலையில், 'தன்னலமற்ற சேவையில் தன்னை ஈடுபடுத்தி கொள்ளுதல்' என்ற தலைப்பில் தெலுங்கானா மற்றும் புதுச்சேரியில் கடந்த ஒரு ஆண்டில் அவர் செய்த பணிகள் குறித்த புகைப்படங்கள் மற்றும் செய்திக்குறிப்புகள் அடங்கிய நூல் தயாரிக்கப்பட்டது.

இந்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. நூலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டார். டாக்டர் சவுந்தரராஜன் முன்னிலை வகித்தார்.

என்னை கொடியேற்ற விடவில்லை

பின்னர், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-

''எனது பணியில் நான் யாருக்கும் இடையூறு செய்ததில்லை. ஆனால் எனது பணிகள் இடையூறாக இருப்பதாக ஆட்சியாளர்கள் சில நேரங்களில் நினைத்து விடுகின்றனர். குடியரசு தினத்தன்று தெலுங்கானா மாநிலத்தில் என்னை கொடியேற்ற விடவில்லை. ராஜ் பவன் வளாகத்திற்குள் நான் கொடியேற்றிக் கொண்டேன்.

சில காரணங்களால் என்னை கவர்னர் உரையாற்றவும் விடவில்லை. எத்தனை இடையூறுகள் வந்தாலும் எனது பணியை தொடர்ந்து செய்து வருகிறேன்.

அரசியலில் நாகரிகம் தேவை

தெலுங்கானாவில் விரட்டிவிட்டார்களா? புதுச்சேரியில் விரட்டி விட்டார்களா? என்று கேட்கின்றனர். என்னை செதுக்கியவர்களை விட ஒதுக்கியவர்கள்தான் அதிகம். தமிழகத்திற்கு வந்தால், அங்கெல்லாம் உங்களை விரட்டுகிறார்கள் தமிழ்நாட்டில் ஏன் மூக்கை நுழைக்கிறீர்கள் என்று கேட்கின்றனர். தமிழகத்தில் மூக்கையும், தலையையும், வாலையும் நுழைப்பேன், காலையும் பதிப்பேன். அதை யாரும் தடுக்க முடியாது. அதேபோல் தமிழகத்தில் தவறு நடந்தால் அதையும் சுட்டி காண்பிப்பேன்.

என்னை அங்கே கொண்டு உட்கார வைக்க வேண்டாம். உங்களோடு உங்களாக இருக்கவே விடுங்கள் என்பதுதான் என்னுடைய கோரிக்கையாக இருக்கிறது. குடியரசு தலைவர் வாய்ப்பு வந்த போது கூட, நான் தெளிவாக கூறி விட்டேன் மக்களோடு மக்களாக இருந்து கவர்னர் பதவியை ஆற்றி வருகிறேன்.

சுதந்திர தின விழா விருந்தில் கலந்து கொள்ள தெலுங்கான முதல்-மந்திரி வருகிறேன் என்றார். நாங்கள் காத்து கொண்டு இருக்கிறோம் ஆனால் அவர்கள் வரவில்லை. வர முடியவில்லை என்று கூறும் அளவிற்கு நாகரிகம் இல்லை. அரசியலில் நாகரிகத்தை கடைப்பிடியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்