விஜய்க்காக போராடுவேன்: 'வாரிசு' பட பிரச்சனைக்கு உதயநிதி காரணமா? - சீமான் பேட்டி

உதயநிதியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று சீமான் கூறியுள்ளார்.

Update: 2022-11-20 11:21 GMT

சென்னை,

விஜய் நடித்துள்ள வாரிசு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. தமிழ்நாட்டில் அதிக தியேட்டர்களில் வாரிசு திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை தெலுங்கு டைரக்டர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரித்துள்ளார்.

விஜய்க்கு தெலுங்கிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதனால் வாரிசு படத்தை ஆந்திரா, தெலுங்கானாவிலும் கூடுதல் தியேட்டர்களில் திரையிட திட்டமிட்டு உள்ளனர். இதற்கு தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் எதிப்பு தெரிவித்து உள்ளது. பொங்கல் பண்டிகையில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே அதிக தியேட்டர்களை ஒதுக்க வேண்டும் என்று தியேட்டர் அதிபர்களை வற்புறுத்தி உள்ளது.

வாரிசு படத்துக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தின் முடிவுக்கு தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் இந்த பிரச்சினை குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் சந்திப்பின் போது கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சீமான், "விஜய்யின் படம் உரிய நேரத்தில் வரும், அதை தடுக்கமாட்டோம் என்று எனக்கு அவர்கள் உறுதியளித்துள்ளனர். இல்லையென்றால் போராடுவேன்.

இதுகுறித்து தீர்மானம் போட்டிருக்கிறோம். ஆனால் இந்த தீர்மானம் செயலாக்கம் பெறவில்லை. அதனால் உறுதியாக விஜய் படம் வெளிவரும் என்று கூறியிருக்கிறார்கள்" என்று தெரிவித்தார். மேலும், வாரிசு படப்பிரச்சினைக்கு உதயநிதி ஸ்டாலின் காரணமா என்று கேட்கப்பட்டதற்கு, "உதயநிதியை அந்த அளவுக்கு குறைத்து மதிப்பிட வேண்டாம். அதுபோல் எல்லாம் நடந்து கொள்ள மாட்டார்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்