குழந்தைகளை விட அவளைத்தான் அதிகம் நேசித்தேன் ஆண் நண்பர்களுடன் பழகி என்னை வெறுத்ததால் மனைவியை கொன்றேன் கைதான டெம்போ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்

குழந்தைகளை விட மனைவியை அதிகம் நேசித்ததாகவும், ஆண் நண்பர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தால் தன்னை வெறுத்ததால் மனைவியை வெட்டி கொன்றதாக டெம்போ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Update: 2022-12-20 18:45 GMT

தக்கலை:

குழந்தைகளை விட மனைவியை அதிகம் நேசித்ததாகவும், ஆண் நண்பர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தால் தன்னை வெறுத்ததால் மனைவியை வெட்டி கொன்றதாக டெம்போ டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

வெட்டி கொலை

தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் தச்சகோடு பகுதியை சேர்ந்தவர் எபனேசர் (வயது35). டெம்போ டிரைவர். இவரும் மூலச்சல் பகுதியை சேர்ந்த ஜெபபிரின்ஷா (31) என்பவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தனர். இவர்களுக்கு ஜெபசோபன் (14), ஜெபஆகாஷ் (13) என 2 மகன்கள் உண்டு. இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி மனைவியின் வீட்டில் அவரது தம்பியின் திருமண பேச்சுவார்த்தை நடந்தது. இதில் கலந்து கொண்ட பின் இரவில் எபனேசர் மோட்டார் சைக்கிளில் மனைவியை அழைத்து கொண்டு புறப்பட்டார். இரவு 11.15 மணியளவில் மருதவிளை பகுதியில் பரைக்கோடு கால்வாய்க்கரையில் வைத்து எபனேசர் தனது மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

தற்கொலைக்கு முயற்சி

பின்னர் அவர் அங்கிருந்து தப்பி ஓடி வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதை கண்ட உறவினர்கள் அவரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த கொலைதொடர்பாக எபனேசர் மீது தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த எபனேசரிடம் குழித்துறை மாஜிஸ்திரேட்டு வாக்குமூலம் பெற்றார். நேற்று முன்தினம் எபனேசரின் உடல்நிலை சரியானதையடுத்து போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.

ஆண் நண்பர்களுடன் பழக்கம்

அங்கு எபனேசர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நானும் ஜெபபிரின்ஷாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். எங்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. மனைவியுடன் நான் அன்பாக இருப்பேன். மனைவியும் என்னிடம் அன்பாகதான் இருந்தாள். எங்கள் வாழ்க்கை மிகவும் சந்தோசமாகதான் இருந்தது.

மனைவி, குழந்தைகளுக்காக வெளிநாட்டில் வேலைக்கு சென்று பணம் சம்பாதித்து சொத்துக்களை வாங்கினேன். கடந்த 2017-ம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த பிறகு சொந்தமாக 2 டெம்போ வாங்கி அதில் ஒன்றை நான் ஓட்டி வந்தேன்.

பட்டினி கிடந்தேன்

இந்த நிலையில்தான் மனைவிக்கு பல ஆண் நண்பர்களோடு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து என்னை வெறுக்கத் தொடங்கினாள். இதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் இரவில் அவரது செல்போனை எடுத்து பார்த்தபோது மனைவி ஒரு ஆண் நண்பரோடு இருந்த போட்டோ இருந்தது.இதுகுறித்து மனைவியிடம் கேட்ட போது எங்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து மனைவியின் பெற்றோரிடம் கூறிய பிறகும் அவர்கள் அவள் பக்கமே நின்றனர். இதனால் நான் மனம் வருத்தமடைந்து அவளை மிரட்டுவதற்காக கையை அறுத்தேன். மேலும் பல நாட்கள் சாப்பிட பிடிக்காமல் பட்டினி கிடந்தேன். அப்ேபாதெல்லாம் மனைவி என்னிடம் 'ஏன்..' என்றுகூட கேட்கவில்லை. மனைவி இந்த நிலைக்கு மறுவதற்கு காரணம் அவள் திருவனந்தபுரத்திற்கு அழகுகலை படிக்க சென்றது தான். நான் அவளிடம், 'படிக்க போக வேண்டாம்' என்றுதான் கூறினேன். ஆனால் அவள் கேட்கவில்லை. அவள் படிக்க சென்றபிறகு அவளது நடவடிக்கையில் இன்னும் பல மாற்றங்கள் தெரிந்தது.

எப்போதும் இறுக்கமான டீ சர்ட் போடுவது, மேக்கப் செய்வது, செல்போனில் சேட்டிங் செய்வது போன்ற செயல்களை செய்தாள். 'ஏன் இப்படி நடந்துகொள்கிறாய்' என கேட்டபோது, 'நான் அப்படி தான் நடப்பேன். உனக்கு விருப்பம் இல்லை என்றால் வேறு திருமணம் செய்துகொள்' என கூறினாள். இதனால் எனக்கு மனைவி மீது மேலும் சந்தேகம் அதிகமானது.

குழந்தைகளை விட அதிகமாக நேசித்தேன்

எனது 2 குழந்தைகளைவிட மனைவியை அதிகமாக நேசித்தேன். அவள் கேட்டதை எல்லாம் வாங்கி கொடுத்தேன். ஸ்கூட்டர் வேண்டும் என்றவுடன் வாங்கி கொடுத்தேன். இருந்தும் என்னை அவள் தொடர்ந்து உதாசினப்படுத்தி வந்தாள்.

இதனால் அவளை தீர்த்து கட்ட முடிவு செய்தேன். அதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். கடந்த 16-ந் தேதி அவளுடைய தம்பியின் திருமண பேச்சுவார்த்தை அன்று அவளிடமும் அவள் பெற்றோரிடமும் அன்பாக நடந்துகொண்டேன். இதனால் அன்று என் மனைவி என்னிடம் அன்பாக நடந்துகொண்டாள். இதனால்தான் நான் அவளை என் வீட்டிற்கு அழைத்தவுடன் சம்மதித்து என்னுடன் இரவில் மோட்டார் சைக்கிளில் வந்தாள்.

திருந்துவாள் என நினைத்தேன்

வரும் வழியில் ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் தயாராக வைத்திருந்த அரிவாளால் தலையில் வெட்டினேன். இதில் கீழே விழுந்தவளின் கழுத்திலும் வெட்டினேன். இதில் பேச்சு மூச்சின்றி அவள் காணப்பட்டாள். உடனே நான் அங்கிருந்து தப்பி எனது வீட்டின் அருகில் உள்ள தோட்டத்தில் தற்கொலை செய்வதற்காக விஷம் குடித்தேன். ஆனால் என்னை ஆஸ்பத்திரியில் ேசர்த்து காப்பாற்றினர்.

எனது இரண்டு குழந்தைகள்தான் பாவம். அவர்களுக்காகத்தான் நான் இவ்வளவு நாள் பொறுத்து கொண்டிருந்தேன். மனைவி திருந்துவாள் என நினைத்தேன். ஆனால் என்னை வெறுத்து பல வாலிபர்களோடு தொடர்பு வைத்திருந்ததால் அவளை கொன்று நானும் சாக முடிவெடுத்தேன்.

இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

11 பக்க கடிதம்

இதனையடுத்து எபனேசரின் வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு தொழுவத்தில் வைக்கோலில் பதுக்கி வைத்திருந்த அரிவாளை போலீசார் மீட்டனர். தொடர்ந்து வீட்டில் சோதனை செய்தபோது எபனேசர் எழுதி வைத்திருந்த 11 பக்கம் கடிதமும் சிக்கியது. கடிதத்தில் எழுதியிருந்ததை போன்றுதான் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறினர். தொடர்ந்து எபனேசரை போலீசார் பத்மநாபபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்