நான் முதல்வன் திட்டம் மாணவர்களின் வேலைவாய்ப்பு, உயர் கல்விக்கு வழிகாட்டும்
நான் முதல்வன் திட்டம் மாணவ-மாணவிகளின் வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்விக்கான வழிகாட்டும் திட்டம் என மாவட்ட கலெக்டர் பேசினார்.;
காரைக்குடி,
நான் முதல்வன் திட்டம் மாணவ-மாணவிகளின் வேலைவாய்ப்பு மற்றும் உயர் கல்விக்கான வழிகாட்டும் திட்டம் என மாவட்ட கலெக்டர் பேசினார்.
பயிற்சி கருத்தரங்கு
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நான் முதல்வன் திட்டம் தொடர்பாக கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களுக்காக நடைபெற்று வரும் பயிற்சி கருத்தரங்கில் மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- முதல்-அமைச்சர் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அனைத்து வழிகாட்டு முறைகளையும் அவர்கள் எளிதில் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் நான் முதல்வன் என்ற திட்டத்தினை அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பள்ளிப்படிப்பில் மாணவர்கள் படிக்கும் போதே உயர்கல்வியில் என்ன படிக்கலாம் என்பது குறித்து போதுமான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையிலும், கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்கள் குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்தவர்களுக்கு பயனுள்ள வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
வழிகாட்டி
இத்திட்டம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு அனுபவ ரீதியாக இணையதளம் மூலம் கற்றல் திறன்களும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் உயர்கல்வியில் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் புதிய தொழில் நுட்பங்களுக்கு தேவையான திறன்களை பெறுவதற்கு தமிழக அரசால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேலைக்கு செல்வதற்கு முன்பே தொழில் நுட்பம் குறித்து தெரிந்து கொள்வதற்கு மாணவர்களுக்கு வழிகாட்டியாக இத்திட்டம் உள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டு மாணவர்கள் தங்களின் தொழில் இலக்குகளை அடையவும், ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து அதன் மூலம் தொழில் நுட்ப நிறுவனங்களினால் வழங்கப்படும் பயிற்சியை பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
நவீன தொழில் நுட்பங்கள்
மாநில கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு தொழில் மற்றும் கல்வி வழிகாட்டுதலையும் உறுதி செய்யவும் இத்திட்டம் அடிப்படையாக அமைகிறது. இத்திட்டத்தினை விரிவுப்படுத்தும் வகையில் கல்லூரி பேராசிரியர்களுக்கான கருத்தரங்கை நடத்த தமிழக அரசால் அறிவுறுத்தப்பட்டு அதன்படி சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த 23 கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் உதவி பேராசிரியர்களுக்கு சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் தொடர்பாகவும், நவீன தொழில்நுட்பங்கள் குறித்தும், திறன்மிக்க பல்வேறு நிறுவனங்களை சார்ந்த பயிற்சியாளர்கள் மூலம் 5 நாட்கள் பயிற்சி கருத்தரங்குகள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே மாணவ-மாணவிகள் தாங்கள் அறிந்ததை விட, இப்பயிற்சி வகுப்பில் புதிதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் மூலம் அறிவுத்திறனை விரிவாக்கம் செய்து கொள்வதற்கு இது நல்ல வாய்ப்பாக அமையும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி, உதவி இயக்குனர் (மாவட்ட திறன் பயிற்சி) கர்ணன் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.