சென்னையில் இருந்து மதுரை நோக்கி தமிழைத்தேடி பரப்புரை பயணம் செய்வது எனக்கே வெட்கமாக உள்ளது - டாக்டர் ராமதாஸ் பேச்சு

சென்னையில் இருந்து மதுரை நோக்கி தமிழைத்தேடி பரப்புரை பயணம் செய்வது எனக்கே வெட்கமாக உள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.;

Update:2023-02-22 14:30 IST

தமிழின் தாயகமாம் தமிழ்நாட்டில் அனைத்து துறைகளில் இருந்து காணாமல் போன தமிழைத்தேடி என்ற தலைப்பில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று காலை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இருந்து மதுரை நோக்கி பரப்புரை பயணத்தை தொடங்கினார். பரப்புரை பயணம் செல்லும் வழியில் மறைமலைநகரில் நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ம.க. சட்டமன்ற குழு தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய ரெயில்வே இணை மந்திரி ஏ.கே.மூர்த்தி, செங்கல்பட்டு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் கி.ஆறுமுகம், மாவட்ட செயலாளர் காயார் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழைத்தேடி பரப்புரை பயணம் மேற்கொள்ளும் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-

தமிழைத்தேடி மதுரை நோக்கி பரப்புரை பயணம் செல்லும் எனக்கு நீங்கள் வாழ்த்து சொல்லுங்கள், உங்கள் வாழ்த்துகளோடு நான் மதுரை நோக்கி செல்கிறேன்.

இன்று முதல் குடும்பத்தில் உள்ள குழந்தைகளுடன் தமிழில் உரையாடுங்கள். இப்போது அம்மா என்ற வார்த்தை யாரும் சொல்வது கிடையாது. மம்மி என்று சொல்கின்றனர். அம்மா என்று பசுக்கள் சொல்கிறது ஆனால் உங்கள் வீட்டில் இருந்து அம்மா என்று யாரும் கூறுவதில்லை அம்மா என்ற வார்த்தையை மறந்து விட்டார்கள். நான் சென்னையில் இருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் வழியில் எங்கு பார்த்தாலும் விளம்பர பலகையில் தமிழ் எழுத்து இல்லை, நாம் லண்டனில் வாழ்கிறோமா என்று கோபம் வருகிறது. பிறந்த நாளன்று மரக்கன்று நட்டால் நான் உங்களை வாழ்த்துவேன். நம்முடைய பாட்டன், பூட்டன்கள் ஹலோ என்று கூறியதில்லை, இப்போது ஹலோ எங்கிருந்து வந்தது.

நாம் 10 வார்த்தை பேசும்போது 9 வார்த்தை பிறமொழி கலந்து பேசுகிறோம், ஒரு வார்த்தை அதுவும் அரைகுறை தமிழில் பேசுகிறோம், அதுவும் கூட நெல்லை, கொங்கு தமிழ் இருந்தாலும் பரவாயில்லை ஆனால் அதுவும் இல்லை நான் இன்று பிறமொழி கலந்து 3 முறை பேசி தவறு செய்துள்ளேன் அதற்கு நானே ரூ.1000 தண்டம் விதித்து கொண்டேன், பெண் குழந்தைகள் பெண் தெய்வம் என்று சொல்லுவேன் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள் தமிழுக்காக பல போராட்டங்களை செய்து விட்டோம். அண்ணா சாலையில் பிறமொழி மீது கருப்பு மை பூசி போராட்டம் செய்துள்ளேன், நாம் அனைவரும் ஒன்று சேர்ந்தால் தமிழை காக்க முடியும் அரசுக்கும் அழுத்தம் கொடுத்தால் அரசும் செய்யும்.

நான் தமிழைத்தேடி மதுரை நோக்கி பயணம் எனக்கே வெட்கமாக உள்ளது. நீங்கள் முழுமையாக ஆங்கிலத்தில் பேசுங்கள். தமிழ் பேசும்போது பிறமொழி கலந்து பேசாதீர்கள். உங்கள் வீட்டில் இருந்து தமிழ் பேசும் பயணம் தொடங்கட்டும் இந்த பயணம் வெற்றி பெற நீங்கள் அனைவரும் என்னை வாழ்த்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தமிழியக்கம் பொது செயலாளர் பேராசிரியர் டி.அப்துல் காதர் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

கூட்டத்தில் மறைமலைநகர் பா.ம.க. நகர செயலாளர்கள் அரிகிருஷ்ணன், ம.தணிகாசலம், மறைமலைநகர் பா.ம.க. நகர அமைப்பாளர் எம்.தினேஷ்குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் இளந்தோப்பு இ.ஏ.வாசு, பூ.வி.கே.வாசு, நெ.சிங்.ஏகாம்பரம், மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மறைமலைநகருக்கு வருகை தந்த டாக்டர் ராமதாசுக்கு பொங்கு தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்