உண்ணாவிரத போராட்டம்; டிரைவர் குடும்பத்தோடு கைது

நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணி ஒதுக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்திய டிரைவர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-10 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவில் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணி ஒதுக்கக்கோரி உண்ணாவிரத போராட்டம் நடத்திய டிரைவர் குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார்.

டிரைவர்

நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பரசேரியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 49). இவர் நாகர்கோவில் ராணிதோட்டம் பணிமனையில் 26 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். தற்போது ஜீப் டிரைவராக உள்ளார். இவருக்கு கடந்த சில வாரங்களாக பணி ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் தனக்கு பணி ஒதுக்கக்கோரி ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு தர்ணா போராட்டம் நடத்தினார். ஆனாலும் அதிகாரிகள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

உண்ணாவிரதம்

இந்த நிலையில் அஜித்குமார் நேற்று தன்னுடைய மனைவி பினு, மகன் அபிஜித் மற்றும் மகள் பிவிஷ்மா ஆகியோருடன் ராணிதோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு வந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். தனக்கு உடனடியாக பணி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, "நான் பஸ் டிரைவராக பணியாற்றி வந்தேன். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஏற்பட்ட விபத்து காரணமாக பஸ் ஓட்ட முடியவில்லை. இதை தொடர்ந்து ஜீப் டிரைவர் பணி ஒதுக்கப்பட்டது. ஆனால் கடந்த 10 நாட்களாக எனக்கு எந்த பணியும் ஒதுக்கவில்லை. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டால் சரியான பதில் அளிக்க மறுக்கிறார்கள். எனவே எனக்கு உடனடியாக பணி ஒதுக்க வேண்டும்" என்றார்.

குடும்பத்தோடு கைது

இதைத்தொடர்ந்து ஆசாரிப்பள்ளம் போலீசார் அங்கு வந்து அஜித்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இதில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டம் நடத்தியதற்காக அவரையும், அவருடைய மனைவி மற்றும் பிள்ளைகளையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்