பெரியபாளையம், கும்மிடிப்பூண்டியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம்
பெரியபாளையம், கும்மிடிப்பூண்டியில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடந்தது.;
மக்கள் ஒற்றுமை, மதச்சார்பின்மை, மத நல்லிணக்கம், சமூக அமைதி, மாநில வளர்ச்சி போன்றவற்றை வலியுறுத்தி மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு இயக்கத்தின் சார்பில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. எல்லாபுரம் ஒன்றிய மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு இயக்கத்தின் சார்பில் பெரியபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., திராவிடர் கழகம், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் இந்த மனித சங்கிலியில் பங்கேற்றனர். 2 மணி நேரம் நடைபெற்ற இப்போராட்டத்தால் சென்னை-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருத்தணியில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம் மா.பொ.சி. சாலையில் உள்ள இந்தியன் வங்கி முதல் சிண்டிகேட் வங்கி வரை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டியில் மதச்சார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் சார்பில் கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் இருந்து பஸ்நிலையம் வரை மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மதன்மோகன், வக்கீல் சம்பத், பிரேம் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் நேசகுமார், கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் நிர்வாகிகள் அருள், ரவிக்குமார், ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.