மழைநீரால் மூழ்கும் நெற்பயிர்களை காப்பது எப்படி?

மழைநீரால் மூழ்கும் சம்பா-தாளடி நெற்பயிர்களை காப்பது எப்படி? என்பது குறித்து மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் யோசனை கூறியுள்ளார்.

Update: 2022-10-30 18:45 GMT

மழைநீரால் மூழ்கும் சம்பா-தாளடி நெற்பயிர்களை காப்பது எப்படி? என்பது குறித்து மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் யோசனை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு பருவமழை

வடகிழக்கு பருவ மழை தொடங்க உள்ளது. அப்போது பெய்யும் தொடர் மழையின் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்க வாய்ப்புள்ளது. அவ்வாறு மழைநீர் சூழ்ந்த வயல்களில் மகசூல் இழப்பை தவிர்ப்பதற்கு வடிகால் வசதி அமைப்பது இன்றியமையாதது. நீரினை வடித்து வேர்ப்பகுதிக்கு காற்றோட்டம் கிடைக்கச் செய்ய வேண்டும்.

சமீபத்தில் நடவு செய்யப்பட்ட இளம் பயிர்கள் நீரினால் அடித்துச் செல்லப்பட்டிருந்தால் நாற்றங்காலில் மீதமுள்ள நாற்றுகளை பயன்படுத்தி நடவு செய்ய வேண்டும். தூர் வெடித்த பயிரினை கலைத்து வழித்தடங்களில் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை பராமரிக்கலாம். முழுவதுமாக நடவு பயிர் அழுகியிருந்தால் குறுகிய கால நெல் ரகங்களை நடலாம் அல்லது நேரடி ஈர விதைப்பு செய்யலாம்.

ஊட்டச்சத்து பற்றாக்குறை

நீரில் மூழ்கிய பயிரில் ஊட்டச்சத்து பற்றாக்குறை தென்பட்டால் ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ ஜிப்சம், 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு என்ற அளவில் கலந்து இரவு முழுவதும் வைத்து தண்ணீர் வடிந்தவுடன் வயலில் இட வேண்டும். போதிய அளவு சூரிய வெளிச்சம் தென்பட்டபிறகு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன் ஒரு கிலோ ஜிங்க் சல்பேட் உரத்தை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைவழி உரமாக தெளிக்க வேண்டும்.

இலை மடக்குப்புழுவின் சேதாரம் 10 சதவீதத்திற்கு அதிகமாக இருந்தால் ஏக்கருக்கு 400 மி.லி. புரோபோனோபாஸ் மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

குலைநோய்

குலைநோயின் சிறு புள்ளிகள் காணப்பட்டால் ஏக்கருக்கு 100 கிராம் கார்பன்டசிம் பூசணக்கொல்லி மருந்தை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். பாக்டீரியா இலைக்கருகல் நோயின் அறிகுறி காணப்பட்டால் ஏக்கருக்கு ஸ்டெப்ரோமைசின் சல்பேட், டெட்ராசைக்ளின் 120 கிராம் மற்றும் 500 கிராம் காப்பர் ஆக்ஸிகுளோரைடு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். நோயின் அறிகுறி காணப்பட்டால் தழைச்சத்து உரமிடுவதை தவிர்க்கலாம். மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதியில் உள்ள மயிலாடுதுறை, மணல்மேடு, காளி, வில்லியநல்லூர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வேளாண் விரிவாக்க மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்