களை நெல்களை கட்டுப்படுத்துவது எப்படி?

களை நெல்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அகஸ்தீஸ்வரம் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

Update: 2022-09-11 20:35 GMT

நாகர்கோவில், 

களை நெல்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து அகஸ்தீஸ்வரம் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வால் நெல்

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் நெல் பயிரிடப்படும் தேரூர், நல்லூர் மற்றும் இரவிபுதூர் ஆகிய கிராமங்களில் வால் நெல் என அழைக்கப்படும் களை நெல் காணப்படுகிறது. வால் நெல் என்பது காட்டு நெல் வகையை சார்ந்தது. இதன் நெல் மணியில் வால் போன்ற அமைப்பு இருப்பதால் வால் நெல் என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் 50 சதவீதம் வரை நெல் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.

வால் நெல் வேகமாக வளரும் இயல்புடையதால் நெல் ரகங்களை காட்டிலும் சீக்கிரம் கதிர் முதிர்ச்சியடைந்து நிலத்தில் உதிர்ந்து விடுகிறது. வழக்கமான நெல் பயிர் போன்று இருப்பதால் இளம் பருவத்தில் வயலில் இதனை கண்டுபிடித்து அழிப்பது சிரமமாக உள்ளது. மேலும் வால் நெல் பூச்சி, நோய் தாக்குதலை எதிர்க்கும் திறன் உடையது. எல்லாவித காலநிலையையும் தாங்கி வளர கூடிய தன்மை உடையது. எனவே இந்த களை நெல்லை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

சான்றிதழ் பெற்ற விதைகளை விவசாயிகள் விதைக்க வேண்டும். அறுவடை எந்திரங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நேரடி விதைப்பு முறையை தவிர்த்து, நிலத்தில் நடும் முறையை கடைபிடிக்க வேண்டும். வால் நெல் விதைகள் சாதாரண நெல் ரகங்களை காட்டிலும் உயரமாக வளர்வதால் அவை பூ பூக்கும் சமயத்திலும், 15 நாள்கள் பூ பூத்த பிறகும் வயலில் இறங்கி அகற்றலாம். அறுவடை முடிந்த வயல்களில் நீரை தேக்கி வைப்பதன் மூலம் வால் நெல் விதைகள் அடுத்த பருவத்தில் முளைப்பதை தவிர்க்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்