கோவில் பாதுகாப்பு தொடர்பான 75 உத்தரவுகளில் எத்தனை அமல்படுத்தப்பட்டுள்ளன? அறநிலையத்துறைக்கு ஐகோர்ட்டு கேள்வி
கோவில்கள் பாதுகாப்பு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட 75 உத்தரவுகளில் எத்தனை உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கோவில்கள் பாதுகாப்பு, நிர்வாகம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து 75 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவில், கோவில் சிலைகளை பாதுகாக்க ஒவ்வொரு கோவிலிலும் 'ஸ்டிராங் ரூம்களை' கட்டவேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
இதுசம்பந்தமான வழக்கு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு சிறப்பு அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில், 25 கோவில்களில் ஸ்டிராங் ரூம்கள் கட்டப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டது.
அவகாசம்
அதற்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், 'கோவில்களில் ஸ்டிராங் ரூம்கள் கட்ட ரூ.308 கோடி ஒதுக்கி 2018-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் கடந்த நிலையில் 25 ரூம்கள் மட்டும் கட்டப்பட்டுள்ளன. பல திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கும் அரசு, இதற்கு ஏன் முக்கியத்துவம் வழங்கவில்லை? கோவில் நிதியை கோவிலுக்கு பயன்படுத்த வேண்டும். பணம் ஒதுக்கியும், 'ஸ்டிராங் ரூம்கள்' கட்டாதது அரசின் இயலாமையை காட்டுகிறது' என்று கூறினர்.
அதற்கு, கோவில்களில் ஒரே மாதிரியாக ஸ்டிராங் ரூம்கள் கட்டவேண்டும் என்பதால், 3 மாதங்கள் அவகாசம் வேண்டும் என்று அறநிலையத்துறை வக்கீல் கோரிக்கை விடுத்தார்.
விருப்பம் என்ன?
அதற்கு நீதிபதிகள், '3 மாதங்கள் அவகாசம் வழங்க தயாராக உள்ளோம். அதற்குள் எத்தனை ஸ்டிராங் ரூம்கள் கட்டப்படும் என்று அறநிலையத்துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கோவில்கள் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் பிறப்பித்த 75 உத்தரவுகளில் எத்தனை அமல்படுத்தப்பட்டுள்ளன, எத்தனை அமல்படுத்தப்படவில்லை, எத்தனையை அமல்படுத்த அரசு விரும்புகிறது என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை விளக்கம் அளிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 31-ந்தேதிக்கு தள்ளிவைத்தனர்.