சென்னையில் பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் பராமரிப்பு எப்படி? பயணிகள் கருத்து

சென்னையில் பஸ் நிலையங்கள், பஸ் நிறுத்தங்கள் பராமரிப்பு குறித்து பஸ் பயணிகளும் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

Update: 2023-08-14 07:24 GMT

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 895 வழித்தடங்களில் 3 ஆயிரத்து 365 பஸ்களை இயக்கி வருகிறது. தினசரி 5 ஆயித்துக்கும் மேற்பட்ட முறை அந்தப் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் சுமார் 50 லட்சம் பயணிகள் பயனடைந்து வருகின்றனர்.

அதேநேரத்தில் பயணிகளின் வசதிக்காக, பஸ்கள் நின்றுசெல்லும் பஸ் நிறுத்தங்கள், பஸ்கள் புறப்படும் பஸ் நிலையங்கள் போன்றவை சென்னை நகரில் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்படுகின்றனவா? என்ற கேள்விகள் எழுகின்றன.

இதுபற்றி பஸ் பயணிகளும் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள். அதன் விவரம் வருமாறு:-

நிற்பதில்லை

ராயபுரத்தைச் சேர்ந்த எழுத்தாளர் லதா சரவணன் கூறும் போது, 'முன்பு இருந்ததைவிட பஸ் நிறுத்தங்கள் தற்போது கொஞ்சம் பரவாயில்லை. இருந்தாலும் ஒரு சில இளைஞர்கள் பாக்குகளை போட்டுவிட்டு எச்சில் துப்புவது, பொதுமக்கள் சிலர் வேண்டாத பொருட்களை பஸ் நிலையங்களில் வீசுவது போன்ற சமுதாய பொறுப்பு இல்லாமல் அருவருக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவதையும் காணமுடிகிறது. இதுகுறித்து போதிய விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டும். இதுதவிர பஸ் நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தி வைத்து கொள்வது, செல்போன் உதிரி பாகங்கள் விற்பனையாளர்கள், பூ வியாபாரிகள் உள்ளிட்ட நடை பாதை வியாபாரிகளும் தங்கள் கடைகளை பஸ் நிறுத்தத்தில் வைத்து கொள்கின்றனர். சிலர் கால்நடைகளை கூட பஸ் நிறுத்தத்தில் கட்டி வைக்கின்றனர். இதுபோன்ற விரும்பத்தகாத செயல்கள் நடப்பதை தடுக்க வேண்டும். முக்கியமாக பஸ் நிறுத்தத்தில் பஸ்கள் நிற்பதில்லை. 50 மீட்டர் தள்ளி நிறுத்துவதால் ஓடிச்சென்று ஏற முயற்சிக்கும்போது பலர் கீழே விழுந்து ரத்தக்காயங்களுடன் திரும்புவதையும் காணமுடிகிறது. இதுபோன்றவற்றை தவிர்க்கலாம்' என்றார்.

பயணிகள் அவதி

சென்னை சிட்லபாக்கத்தைச் சேர்ந்த கட்டிடப் பொறியாளர் உதயவாணி கூறும் போது, 'தாம்பரம் ரெயில் நிலையம், முனையமாகவும், தாம்பரம் நகராட்சி, மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு ஜி.எஸ்.டி. சாலையை எளிதாகவும், பாதுகாப்பாகவும் கடப்பதற்கு உயர்மட்ட நடைமேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு உள்ளது. ஆனால், தினசரி கல்வி நிறுவனங்களுக்கு செல்பவர்கள், வணிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பட்ட 10 லட்சம் பேர் வந்து செல்லும் தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிறுத்தத்தில் இருந்தும் வெளியூர் மற்றும் உள்ளூரில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பயணிகளுக்கு ஒரு நிழற்குடை இல்லாமல் வெயில், மழை காலங்களில் அவதிப்படுகின்றனர். போதுமான இட வசதி இருப்பதால், பயணிகள் நலன் கருதி, மாநகராட்சி நிர்வாகம் காலம் தாழ்த்தாமல் சிறப்பு நிதியில் பயணிகள் நிழற்குடை, இருக்கை வசதி, கழிப்பறை வசதியுடன் செய்து தருவதுடன், அவற்றை முறையாக பராமரிக்கவும் வேண்டும்' என்றார்.

பாதுகாப்பு

தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியை ஆதிலட்சுமி கூறும் போது, 'பஸ் நிறுத்தங்களில் இருக்கை உள்ளிட்ட போதுமான வசதிகள் செய்து தரப்படவில்லை. இதனால் பெண்கள், முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர். நிறுத்தங்களில் தேவையில்லாதவர்கள் நின்று கொண்டு அரட்டை அடிப்பது, தூங்குவது போன்றவற்றை தடுக்க வேண்டும். பஸ் நிறுத்தங்களை உள்ளாட்சி அமைப்புகளும் தினசரி இல்லாவிட்டாலும், வாரம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும். ஒரு சில பஸ் நிறுத்தங்களில் உள்ள மின்விளக்குகளுக்காக சோலார் தகடுகள் அமைக்கப்பட்டு அவை பழுதாகி கிடக்கின்றன. அவற்றையும் சரி செய்து செயல்பட வைக்க வேண்டும். அலுவலக நேரங்களில் பஸ்களும் பஸ் நிறுத்தத்தில் நிறுத்தப்படாமல் சற்று தள்ளி போய் நிறுத்துவதால், பயணிகள் உயிரை பணயம் வைத்து கொண்டு ஓடிச்சென்று பஸ்சில் ஏற வேண்டிய நிலை இருக்கிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கும் பஸ் பயணம் தொடர்பாக போதிய விழிப்புணர்வும் அளிக்கப்பட வேண்டும். யாரிடம் பிரச்சினை இருக்கிறது என்பது குறித்து தெரியவில்லை. புறநகர் பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் அலுவலக நேரங்களில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்' என்றார்.

டாஸ்மாக் கடை

சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்த ஜி.சந்தியா கூறும் போது, 'பஸ் நிறுத்தம் அருகிலேயே டாஸ்மாக் கடை இருப்பதால் அந்த வழியாக பெண் பயணிகள் பஸ்சில் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் அச்சப்படும் சூழல் உள்ளது. பணி முடிந்து வீட்டுக்கு திரும்பி செல்லும் போது இரவு நேரங்களில் தெருவிளக்குகளும் முறையாக எரிவதில்லை. எனவே, டாஸ்மாக் கடையை பஸ் நிறுத்தம் அருகில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றினால் நன்றாக இருக்கும். அலுவலக நேரங்களில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். அலுவலக நேரங்களில் போதிய எண்ணிக்கையில் பஸ்கள் இல்லாததால் பஸ் நிறுத்தத்தை பயணிகள் தேடிச் செல்வதில்லை. பஸ்களின் வருகை, புறப்பாடு குறித்த தகவல் அமைப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். பஸ்கள் வரும் நேரத்தை காண்பிப்பது பயணிகளுக்கு உதவியாக இருக்கும். பஸ்கள் வரும்போது பயணிகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளிலும் அறிவிப்புகள் வழங்க வேண்டும். பஸ் நிலையங்களில் பொதுமக்கள் அதிகம் வந்து செல்வதால் இவற்றை முறையாக பராமரிக்க வேண்டும்' என்றார்.

போக்குவரத்து கழக அதிகாரிகள்

தமிழக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறும்போது, 'தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக பஸ்கள் எந்தெந்த பஸ் நிறுத்தத்துக்கு எப்போது வரும். அங்கிருந்து எப்போது புறப்படும் என்ற தகவலை வழங்குவதற்கான நடவடிக்கையில் போக்குவரத்து துறை இறங்கி உள்ளது. இந்த தகவல்களை செல்போன் செயலி மூலம் அறிந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் உள்பட தமிழகத்தில் உள்ள 7 போக்குவரத்து கழகங்கள் டெண்டர் விட்டுள்ளன. குறிப்பாக, சென்னை மாநகர போக்குவரத்து கழகம், விழுப்புரம், கும்பகோணம், நெல்லை, சேலம், கோவை, மதுரை ஆகிய 7 போக்குவரத்து கழகங்களில் பஸ் நிறுத்தங்களுக்கு பஸ்கள் வரும் நேரம், அங்கிருந்து புறப்படும் நேரம் ஆகியவை செல்போன் செயலி மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இது அனைத்து பஸ் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள், பஸ் வழித் தடங்களில் பஸ்களின் வருகை, புறப்படும் நேரம் பற்றிய தற்போதைய போக்குவரத்து தகவல்களை வழங்கும். இந்த டெண்டரில் 7 போக்குவரத்து கழகங்களுக்கான வடிவமைப்பு, மேம்பாடு, செயல்படுத்தும், ஒருங்கிணைப்பு, வாகன திட்டமிடல் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த வசதி 2 ஆயிரத்து 213 புதிய டீசல் பஸ்கள், 500 மின்சார பஸ்களில் செயல்படுத்தப்பட உள்ளது' என்றனர்.

மத்திய, மாநில அரசுகள்

சர்வதேச பொதுப்போக்குவரத்து நிபுணர் அமுதன் வளவன் கூறும் போது, 'தமிழகத்தில் நகர வளர்ச்சிக்கு ஏற்ப பஸ் நிறுத்தங்கள் அதிகரிக்கப்படவில்லை. நகரங்களில் உள்ள பஸ் நிறுத்தங்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்படும் நிழற்குடைகள் முறையாக பராமரிக்கப்படாமல் தமிழகத்தில் அதிகம் உள்ளன. பஸ் நிறுத்தங்கள் நாய்கள் மற்றும் பிச்சைக்காரர்களின் புகலிடமாக மாறி உள்ளன. சில பஸ் நிறுத்தங்களில் குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் இல்லாததால், பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மழை, வெயில் அல்லது கடும் பனி போன்ற தீவிர வானிலையின்போது பொதுபோக்குவரத்து வாகனங்களுக்காக காத்திருக்கும் மக்களுக்கு சிரமமும் ஏற்படுகிறது. பஸ் நிறுத்தங்களில் உள்ள நிழற்குடைகளில், விளம்பர சுவரொட்டிகளால் தகவல்கள் மறைக்கப்படுவதால் பஸ் பற்றிய விவரம் இல்லாமல் இருக்கிறது. சில பஸ் நிறுத்தங்களில் காலாவதியான கால அட்டவணை இருப்பதால் தகவல்களை பயணிகள் பெற முடியாத நிலையும் உள்ளது. மேலைநாடுகளில் இருப்பது போன்று பஸ் நிறுத்தங்களில் நிகழ்நேர பஸ் வருகைத் தகவல் பலகை இருந்தால், பயணிகளுக்கு வாகன தாமதங்கள் அல்லது அட்டவணை மாற்றங்கள் தெரிந்துகொள்ள எளிதாக இருக்கும்.

அவசியமற்ற இடங்களில் பஸ் நிறுத்தம் இருப்பதால், பயணிகள் நீண்ட தூரம் நடந்து சென்று பொது போக்குவரத்தை அணுக வேண்டியதாக இருக்கிறது. இது திறமையான வாகன செயல்பாடுகளுக்கு இடையூறாக இருக்கிறது. நகரப்பகுதிகளில் உள்ள போக்குவரத்து சிக்னலில் இருந்து மிக நெருக்கத்தில் சில பஸ் நிறுத்தங்கள் இருப்பதால் (50 மீட்டருக்கு குறைவான தூரத்தில்) போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பஸ் நிறுத்தங்களில் வயதானவர்கள் அல்லது மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு தனிச்சிறப்பு கொண்ட போதுமான இருக்கைகள் இல்லாமலும், சக்கர நாற்காலியை பயன்படுத்துபவர்களுக்கான சரிவுகள் அல்லது பார்வையற்றோருக்கான தொட்டுணரக்கூடிய குறிகாட்டிகள் போன்ற சரியான அணுகல் தன்மை அம்சங்களுடன் கூடிய பஸ் நிழற்குடைகள் நகராட்சி நிர்வாகத்தால் வடிவமைக்கப்படாமல் இருக்கிறது. பஸ் நிறுத்தங்களில் மாலை நேரங்களில், இருட்டிற்கு பிறகு போதிய வெளிச்சமின்மையால் மக்களின் பாதுகாப்பு என்பது கவலை கொண்டதாக இருக்கிறது. பாதுகாப்பற்ற பகுதிகளில் பஸ் நிறுத்தங்கள் குற்றச்செயல்களை சந்திக்க நேரிடுகிறது. எனவே, பஸ் நிறுத்தங்களில் உள்ள மேற்கூறிய குறைகளை மத்திய, மாநில, பெருநகர, நகர அமைப்புகள் சரி செய்யவேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்