மத்திய அரசு பட்ஜெட் எப்படி?பொருளாதார நிபுணர்கள், பொதுமக்கள் கருத்து

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் எப்படி? என்பது குறித்து பொருளாதார நிபுணர்களும், பொதுமக்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

Update: 2023-02-01 18:45 GMT

முதலீடுகள் அதிகரிக்க வாய்ப்பு

நிதி ஆலோசகர் வ.நாகப்பன்:- மத்திய அரசின் 2023-24 பட்ஜெட்டில் விவசாயிகள், கிராமப்புறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. நடுத்தர மக்களையும் கவனத்தில் கொண்டு தனி நபர் வருமான வரி உச்சவரம்பை உயர்த்தி உள்ளது வரவேற்புக்குரியது. கிராமப்புறங்களில் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் தொடங்கப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்களிடையே விவசாயம் மற்றும் சுயத்தொழில் மீது ஆர்வத்தை ஏற்படுத்தும். இன்றைய நவீன தொழில்நுட்பத்தை விவசாயத்தில் புகுத்தி நல்ல லாபம் பெற ஏதுவாக இருக்கும். குழந்தைகளுக்கான 'டிஜிட்டல்' நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு சிறப்புக்குரியது. மறைமுக வரிகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டு முதலீடுகள் கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்புகள் உண்டாகும். இன்றைய சூழலில் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் முயற்சியாக இந்த 'பட்ஜெட்'டை மத்திய அரசு தயாரித்து உள்ளது என்று நான் கருதுகிறேன். ஆனால் அதே நேரத்தில் இந்த அறிவிப்புகள் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வியப்பை தரும் 'பட்ஜெட்'

பொருளாதார பேராசிரியர் வெங்கடசாமி:- 'அனைத்து தரப்பினருக்கும், அனைத்தும்' என்ற நோக்கில் உலகமே வியக்கும் வகையில், இந்திய பொருளாதாரத்தை ஒளிர செய்யும் 'பட்ஜெட்' இது. கால்நடை வளர்ப்பு, மீன்வளத்துறைக்கு ரூ.20 லட்சம் கோடி ஒதுக்கீடு, கிராமப்புறங்களில் வேளாண் 'ஸ்டார்ட்-அப்' நிறுவனங்கள் தொடங்க ஊக்குவிப்பு, விவசாயிகளுக்கான கடன் தொகை அதிகரிப்பு, வர்த்தக புரிதலை எளிமையாக்கும் வகையில் 39 ஆயிரத்துக்கும் அதிகமான நடைமுறைகள் நீக்கம், ஒருங்கிணைந்த வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும் நடைமுறை என நல்ல பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. கூட்டுறவு தரவுதளம் தொடங்கப்பட்டு, அதில் மீன்பிடி தொழிலாளர்கள் இணைக்கப்படும் என்ற அறிவிப்பு நல்ல அறிவிப்பாகும். 'ஒருங்கிணைந்த வசதி, கடைசிவரை வசதி, நிதித்துறை கட்டமைப்பு வசதி' என்ற அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த 'பட்ஜெட்' நிச்சயம் இந்திய பொருளாதாரத்தை முன்னேற்ற செய்யும் பட்ஜெட் ஆகும். அனைத்து தரப்பு மக்களையும் திருப்திபடுத்தும், அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்றத்தை தரும் பட்ஜெட்டாகவும் இருக்கிறது. அந்தவகையில் இது கவர்ச்சிகரமான, அதேவேளை வியப்பை தரும் பட்ஜெட்டாகவும் அமைந்திருக்கிறது.

சமூக கட்டமைப்பை மேம்படுத்தும்

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஜி.சந்தானம்:- 2024-ம் ஆண்டு தேர்தலை அடிப்படையாக கொண்டு அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் உள்ளது. நடுத்தர மக்களுக்கு வருமான உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு, ஏழைகளுக்கான பிரதமர் வீடுகட்டும் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ரூ.70 ஆயிரம் கோடியாக உயர்வு, நகர்ப்புற கட்டமைப்புக்கு ஆண்டுதோறும் ரூ.10 ஆயிரம் கோடி, 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி என்ற அம்சங்கள் வரவேற்கத்தக்கது. பொதுவாக, இந்த பட்ஜெட் சமூக கட்டமைப்பை மேம்படுத்துகிற ஒன்றாக உள்ளது. இந்த பலத்தால் தான் இந்தியா பொருளாதார சிக்கல்களை இதுவரை சிறப்பாக சமாளித்து வந்துள்ளது. ஜி20 மாநாட்டின் குறிக்கோள்களான சுகாதாரம், மரபுசாரா எரிசக்தி உபயோகத்தை அதிகரித்தல், இயற்கை வளங்களை முறையாக பயன்படுத்துதல் ஆகியவற்றை இந்த பட்ஜெட் ஊக்கப்படுத்தி உள்ளது. 5ஜி-யை வேலை வாய்ப்புக்கும், விவசாயத்துக்கும், விவசாயப்பொருட்களை சந்தைப்படுத்தவும் பயன்படுத்த முன்வந்திருப்பது பாராட்டத்தக்கது. இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் அடிப்படை கட்டமைப்புக்கான நிதி ஒதுக்கீட்டு அதிகரிப்பை அதிகபட்ச அளவில், தமிழ்நாடு அரசு தனதாக்கிக்கொள்ள சிறப்பு திட்டங்கள் வகுத்து, தனிமுயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயிகளுக்கு ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்

அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன்:- விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவோம் என்று 2019-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையிலும், கொள்கை முடிவாகவும் மத்திய பா.ஜ.க. அரசு தெரிவித்தது. அதை வலியுறுத்தியும், 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரியும் டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக விவசாயிகள் நீண்ட போராட்டத்தை முன்னெடுத்ததை நாடே மறந்திருக்க முடியாது. இந்தநிலையில் தற்போதைய மத்திய அரசின் பட்ஜெட்டில் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம், வேளாண் சட்டங்கள் ரத்து போன்ற முக்கிய அறிவிப்புகள் இடம்பெறவில்லை. பாரம்பரிய விவசாயத்துக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் மரபணு மாற்றப்பட்ட விதை பயிர்களை அனுமதிக்கிறார்கள். விவசாயிகளுக்கு கடன் கொடுப்போம் என்கிறார்கள். முதலில் வங்கிகளில் ஏற்கனவே வாங்கிய கடனை கட்ட முடியாமல், கருப்பு பட்டியலில் இருக்கும் விவசாயிகளுக்கு கடன்பெறும் தகுதியை மத்திய அரசு பெற்றுக்கொடுக்கட்டும். இப்படி பல முரண்பாடுகள் கொண்டதாகவே மத்திய அரசின் பட்ஜெட் இருக்கிறது. பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் திட்டங்களும், சலுகைகளும் முழுக்க முழுக்க கார்ப்பரேட்களுக்காகவே போடப்பட்டு இருக்கிறது. இந்த பட்ஜெட் விவசாயிகளுக்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்டாகவே அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

பெண்களுக்கு சிறுசேமிப்பு திட்டம்

தமிழ்நாடு மாநில சிறுசேமிப்பு முகவர்கள் சங்க தலைவர் பாலாஜி:-

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்ட உச்ச வரம்பினை ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி உள்ளனர். இது மிகவும் வரவேற்கத்தக்கது. இத்திட்டத்திற்கு தற்போது 8 சதவீத வட்டி வழங்கப்படும் நிலையில், மூத்த குடிமக்கள் தனது ஓய்வுகால பயன்பாடு மற்றும் எதிர்கால நலனுக்கான சேமிப்பு தொகையை இத்திட்டத்தில் முதலீடு செய்து பயன் பெற முடியும்.

மாதாந்திர வருவாய் திட்ட உச்ச வரம்பினை தனிநபருக்கு ரூ.9 லட்சமாகவும், கூட்டாக ரூ.15 லட்சமாகவும் உயர்த்தி இருப்பது சிறப்பு அம்சமாகும். கையிருப்பு தொகையை அஞ்சலகத்தில் முதலீடு செய்து மாதாந்திர வட்டி பெற்று பயன் அடையும் முதலீட்டாளர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். பெண்களின் பெயரில் 2 ஆண்டுகள் சேமிப்பு செய்யும் வகையில் 7 சதவீத வட்டியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள மகிளா சம்மான் புதிய சேமிப்பு திட்டத்தை வரவேற்கிறோம். சிறுசேமிப்பு திட்டங்களில் அடிப்படை களப்பணி செய்திடும் சிறுசேமிப்பு முகவர்களின் நலன் மேம்பாட்டிற்கு அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது.

வருமானவரி உச்சவரம்பு உயர்வு

திருச்செங்கோடு ஆடிட்டர் வெங்கடேஸ்வரன்:-

புதிய வரி நடைமுறையில் ஆண்டுக்கு ரூ.7 லட்சம் வரை வருமானம் உள்ள தனிநபருக்கு வருமான வரி கிடையாது. வருமான வரி விலக்கிற்கான உச்ச வரம்பு ரூ.2½ லட்சத்தில் இருந்து ரூ.3 லட்சமாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ரூ.5 லட்சம் வரை இருந்த தனிநபர் வருமானவரி உச்ச வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இது வரவேற்கத்தக்க அம்சம் ஆகும்.

இதுவரை தனிநபருக்கான உச்சபட்ச வரி 42 சதவீதம் ஆக இருந்த நிலையில், தற்போது உச்சபட்ச வருமான வரி 40 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து உள்ளது. மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் லித்தியம் இறக்குமதிக்கு வரி குறைப்பு செய்யப்பட்டு உள்ளது. அடுத்த 3 ஆண்டுகளில் 47 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது பாராட்டுக்கு உரியது.

தங்கம் வரி உயர்வு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை தலைவர் பெரியசாமி:-

செல்போன் உதிரி பாகங்கள் இறக்குமதி வரி குறைப்பால், செல்போன் விலை குறைய வாய்ப்பு உள்ளது. மின்சார வாகன பேட்டரிகளுக்கு வரி குறைப்பு, பெண்களுக்கான சேமிப்பு திட்டம், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ.7 லட்சமாக உயர்வு போன்றவை மிகவும் வரவேற்கத்தக்கது ஆகும். இதேபோல் சிறு, குறு தொழிலாளர்களுக்கு கூலி ஊக்குவிப்பு கடன்தொகை பாராட்டுக்கு உரியது. அதேசமயம் தங்கம் மற்றும் வெள்ளிக்கு வரி உயர்வு என்பது நடுத்தர மக்களை பாதிக்கும் அம்சம் ஆகும்.

புதிய நர்சிங் கல்லூரிகள்

ராசிபுரம் முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் (பொருளாதாரம்) கார்த்திகை செல்வம்:-

ரெயில்வேக்கு ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு, விவசாய கடன் இலக்கு ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு, கூடுதலாக 50 விமான நிலையங்கள், முக்கிய இடங்களில் 157 புதிய நர்சிங் கல்லூரிகள் போன்றவை வரவேற்கத்தக்கது. பொறியியல் நிறுவனங்களில் 5 ஜி சேவைகளை பயன்படுத்தி பயன்பாடுகளை உருவாக்க 100 ஆய்வகங்கள் அமைக்கப்படும். இயற்கை விவசாயம் ஊக்குவிப்பு போன்றவை பாராட்டுக்கு உரியது. கியாஸ் சிலிண்டர் விலையில் திருத்தம் இல்லை. அத்தியாவசிய பொருட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. சிறு தொழில்கள் மற்றும் நெசவாளர்கள் இன்னும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு உள்ளனர். விளையாட்டுத் துறைக்கு முன்னுரிமை வழங்கப்படவில்லை. இது சாதகமற்ற அம்சம் ஆகும்.

ஏமாற்றம் அளிக்கிறது

நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ராமு:- குழந்தைகள், இளைஞர்களுக்காக அனைத்து கிராமங்களிலும் நூலகங்கள் அமைக்கப்படும். பழங்குடியினருக்கான 740 ஏகலைவா பள்ளிகளுக்கு 38 ஆயிரம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்கிற அறிவிப்புகள் வரவேற்கத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்