3 பேரை பலி கொண்ட வெடி விபத்து ஏற்பட்டது எப்படி?

ஆலங்குளம் அருகே 3 பேரை பலி கொண்ட வெடி விபத்து ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

Update: 2023-02-17 18:45 GMT

ஆலங்குளம்:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டியில் கிணறு தோண்டும் பணி நடந்து வந்தது. அங்கு நேற்று முன்தினம் டெட்டனேட்டர்கள் எனப்படும் வெடிப்பொருளை சக்திவாய்ந்த பேட்டரி மூலம் சோதனை செய்தபோது, எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது. இதில் அரவிந்த், ஆசீர் சாலமன், ராஜலிங்கம் ஆகிய 3 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த மாரிசெல்வம் என்பவர் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கிணறு தோண்டும் பணிக்கான ஒப்பந்ததாரர் சக்திவேலை கைது செய்தனர். மேலும் ேபாலீசார் நடத்திய விசாரணையில், வெடி விபத்து ஏற்பட்டது எப்படி என்பது குறித்து பரபரப்பான தகவல் வெளியானது. அதாவது கிணற்றில் 3 துளைகள் போடப்பட்டு டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை வைத்து வெடிக்க செய்தனர். ஆனால் அவை எதிர்பார்த்தபடி வெடிக்கவில்லை. இதனால் மீதமிருந்த டெட்டனேட்டர்களை கிணற்றுக்கு வெளியே வைத்து சக்திவாய்ந்த பேட்டரி மூலம் சோதனை செய்துள்ளனர். அப்போது தான் எதிர்பாராதவிதமாக அவை வெடித்து விபத்து ஏற்பட்டது தெரியவந்து உள்ளது.

கிணற்றில் வெடிக்காமல் இருக்கும் டெட்டனேட்டர் மற்றும் ஜெலட்டின் குச்சிகளை செயலிழக்க செய்யும் பணிைய வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழத்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் பால்ராஜ் தலைமையிலான குழுவினர் தொடங்கினர். ஆனால் பல்வேறு முயற்சிகள் செய்தும் பலன் அளிக்கவில்லை. பின்னர் இரவு நேரமாகி விட்டதால் அந்த பணி நிறுத்தப்பட்டது.

நேற்று காலையில் மதுரையில் இருந்து வந்த நிபுணர் குழுவுடன் இணைந்து டெட்டனேட்டர்களை செயலிழக்க செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அதுவும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து சென்னையில் இருந்து டெட்டனேட்டர்களை செயலிழக்க செய்ய சிறப்பு குழு இன்று (சனிக்கிழமை) வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

கைதான சக்திவேலிடம் இருந்து 84 டெட்டனேட்டர்கள், 88 ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தன. அவற்றை வாகனத்தில் ஏற்றி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பாவூர்சத்திரம் அருகே உள்ள அரசு அனுமதி பெற்ற தனியார் வெடிமருந்து குடோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்