1,260 பேருக்கு வீட்டுமனை பட்டா; அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

நங்கநல்லூரில் 1,260 பேருக்கு வீட்டுமனை பட்டா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2023-05-02 19:00 GMT

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த நங்கநல்லூரில் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 1,260 பேருக்கு அடுக்குமாடி வீடு, தனி வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் நிலஅளவை மற்றும் ஆயத்துறை தீர்வை இயக்குனர் டி.ஜெ.வினய், சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி, ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என்.சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 1,260 பேருக்கு மனை பட்டா, முதல்வர் காப்பீட்டு திட்ட அட்டை போன்றவற்றை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும்போது, 'பட்டா கேட்டு விண்ணப்பம் தந்தால் உடனடியாக பட்டா வழங்கும்படி கள ஆய்வில் முதல்-அமைச்சர் கூறி இருக்கிறார். வீடு என்பது ஒவ்வொரு குடும்பத்தினரின் கனவாகும். அதற்கு பட்டா அவசியம். வருவாய் துறை மூலம் 35-க்கும் மேற்பட்ட சேவைகள் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதேபோல் ஜாதி சான்று, வருவாய் சான்றிதழ் உடனடியாக வழங்கவும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் மகளிருக்கான ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும். இந்த அரசு சொன்னதை செய்வோம் சொல்லாததையும் செய்வோம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறது என கூறினார்.

விழாவில் தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி, செல்வம் எம்.பி. இ.கருணாநிதி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்