பூண்டு, சின்ன வெங்காயம் விலை உயர்வால் இல்லத்தரசிகள் கவலை

தக்காளியை தொடர்ந்து பெரம்பலூரில் பூண்டு, சின்ன வெங்காயம் விலையும் உயர்ந்துள்ளது.

Update: 2023-07-12 18:51 GMT

இஞ்சி விலை

காய்கறி விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு காரணமாக அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. முதலில் தக்காளி விலை உயரத் தொடங்கியது. கடந்த மாதத்தில் ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்போது ரூ.120 வரை பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை ஆகிறது. தக்காளியின் விலை இறங்கவே இல்லை. வெளி மார்க்கெட்டில் அதைவிட அதிகமாக விற்கப்படுகிறது. இதனால் ஓட்டல்களில் தக்காளி சாதம், தக்காளி சட்னி, தக்காளி சூப் ரத்து செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூர் உழவர் சந்தையில் தக்காளி சிறப்பு விற்பனையாக கிலோ ரூ.100-க்கு விற்கப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை போல் பெரம்பலூரிலும் தக்காளியை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் விற்பனை செய்ய கூட்டுறவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு இஞ்சி விலையும் 'கிடுகிடு'வென உயர்ந்தது. தற்போது வரை இஞ்சி ஒரு கிலோ ரூ.300-க்கு பெரம்பலூர் மார்க்கெட்டிலேயே விற்கப்படுகிறது. மூன்று சதத்தை எட்டி இஞ்சி விற்பனை ஆகி வருகிறது. இதனால் டீக்கடையில் இஞ்சி டீ தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சின்ன வெங்காயம் விலையும்...

இது ஒரு புறம் இருக்க பூண்டு விலையும் யாரும் எதிர்பாராத விதமாக எகிறியது. ரூ.150-க்கு விற்ற பூண்டு தற்போது ஒரு கிலோ ரூ.250-க்கு மார்க்கெட்டிலும், கடைகளிலும் விற்பனை ஆகிறது. இந்த வரிசையில் தற்போது சின்ன வெங்காயமும் இடம்பெற்று விட்டது. நேற்று முன்தினம் வரை பெரம்பலூர் காய்கறி மார்க்கெட்டில் ரூ.100 வரை விற்கப்பட்டு வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் சின்ன வெங்காயம் விலை உயர்ந்துவிட்டது. கிலோவுக்கு ரூ.30 உயர்ந்து, பெரம்பலூர் மார்க்கெட்டில் ரூ.130 வரை விற்பனை செய்யப்பட்டது. பச்சை மிளகாய், பீன்ஸ், முருங்கைக்காய், அவரைக்காய், பாகற்காய் உள்பட சில காய்கறியின் விலையும் தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்பட்டு வருகிறது. ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.100-க்கும், அவரைக்காய் ரூ.50-க்கும், பாகற்காய் ரூ.70-க்கும், முருங்கைக்காய் 50-க்கும், பீன்ஸ் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பெரம்பலூர் உழவர் சந்தை, காய்கறி மார்க்கெட் ஆகியவற்றில் காய்கறிகளை வாங்க பொதுமக்கள் கூட்டம் குறைந்த அளவே காணப்படுகிறது. அவர்களும் விலை உயர்வால் குறைவான அளவுக்கு காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

வரத்து குறைவு

தக்காளி, இஞ்சி, பூண்டு, சின்ன வெங்காயம் விளைச்சல் பாதிப்பால், வரத்து குறைந்து விட்டது. இதன் காரணமாகவே அதன் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து உள்ளது. வரக்கூடிய நாட்களிலும் அதன் விலை சற்று உயர வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

மற்ற காய்கறிகளின் விலை

மற்ற காய்கறிகளின் விலை விவரம் கிலோ கணக்கில் வருமாறு:- கத்தரிக்காய்-ரூ.40, வெண்டைக்காய்-ரூ.30, புடலங்காய்-ரூ.50, பீர்க்கங்காய்-ரூ.60, மாங்காய்-ரூ.40, பரங்கிகாய்-ரூ.30, பூசணிக்காய்-ரூ.25, சுரைக்காய்-ரூ.15, பெல்லாரி (பெரிய வெங்காயம்)-ரூ.35, உருளைக்கிழங்கு-ரூ.30, கேரட்-ரூ.70, சவு சவு-ரூ.50, பீட்ரூட்-ரூ.50, நூல்கோல்-ரூ.60, காலி பிளவர் ஒன்று-ரூ.50 ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த காய்கறிகள் பெரம்பலூர் உழவர் சந்தையில் சற்று குறைந்த விலையிலும், சில்லறை விற்பனை கடைகளிலும் சற்று அதிக விலையிலும் விற்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்