பொங்கலூரில் உரிய பதிவுச்சான்று பெறாமலும், உரிய கல்வித்தகுதி உடைய டாக்டர்கள் சிகிச்சை அளிக்காமலும் இயங்கிய மருத்துவமனையை அதிகாரிகள் பூட்டி 'சீல்' வைத்தனர்.
தனியார் மருத்துவமனை
திருப்பூர் அருகே பொங்கலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிகிச்சை, அக்குபஞ்சர் மற்றும் சித்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு உரிய கல்வி தகுதி இல்லாத நபர்கள் மூலமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி தலைமையில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அருண்பாபு, அலுவலக கண்காணிப்பாளர் ஹரிகோபாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.
அந்த மருத்துவமனையில் ஒரு அறையில் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் எனவும் மற்றொரு அறையில் அக்குபஞ்சர் மருத்துவமும் மேலும் ஒரு அறையில் சித்த மருத்துவம் என 3 டாக்டர்கள் சிகிச்சை அளிப்பது தெரியவந்தது. சோதனையின்போது அங்கு அக்குபஞ்சர் பிரிவில் அருள் என்பவர் மட்டும் சிகிச்சை அளித்தார்.
உரிய பதிவுச்சான்று பெறவில்லை
மருத்துவமனை செயல்படும் கட்டிடத்தின் உரிமையாளர் தெய்வசிகாமணி, மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனரிடம் பதிவு செய்யாமல் சட்டத்துக்கு புறம்பாக மருத்துவமனை நடத்தி வந்தது தெரியவந்தது. இது குறித்து தெய்வசிகாமணியிடம் விசாரித்தபோது, மருத்துவமனையில் உள்ள டாக்டர்களின் கல்வித்தகுதி ஆவணங்கள் எதுவும் தன்னிடம் இல்லை என்று கூறினார். அதுபோல் அக்குபஞ்சர் சிகிச்சை அளித்த அருள் என்பவரும் தனது கல்வித்தகுதி தொடர்பான ஆவணங்களை அதிகாரிகளிடம் வழங்கவில்லை.
உரிய கல்வித்தகுதி இல்லாமல், மருத்துவமனைக்கு உரிய பதிவுச்சான்று பெறாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது சட்டப்படி தவறு என்று தெரிவித்ததுடன், மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களின் கல்வித்தகுதி தொடர்பான ஆவணங்களுடன் உரிமையாளரையும், அருள் என்பவரையும் கடந்த 20-ந் தேதி மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் அலுவலகத்துக்கு விசாரணைக்கு வருமாறு தெரிவிக்கப்பட்டது.
பூட்டி சீல் வைத்தனர்
ஆனால் அவர்கள் விசாரணைக்கு வரவில்லை. இதைத்தொடர்ந்து நேற்று இணை இயக்குனர் கனகராணி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அருண்பாபு, செம்மிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சுடர்விழி, பல்லடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்புராஜ் ஆகியோர் பொங்கலூரில் உள்ள சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று உடனடியாக பூட்டி 'சீல்' வைத்தனர்.
இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) மாவட்ட இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் நடக்கும் விசாரணைக்கு உரிய ஆவணங்களுடன் ஆஜராகுமாறு மருத்துவமனை உரிமையாளர் மற்றும் டாக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.