குணமாகும் என்ற நம்பிக்கைதான் முதற்கட்ட சிகிச்சை: புற்றுநோய் பாதித்த குழந்தைகளை முழுமையாக மீட்டெடுக்கலாம்
புற்றுநோய் பாதித்த குழந்தைகளை முழுமையாக மீட்டெடுக்கலாம் என எழும்பூர் அரசு குழந்தைகள் நல டாக்டர் தெரிவித்தார்.
புற்றுநோயை எதிர்த்துப்போராடும் நோயாளிகளுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் உலகம் முழுவதும் செப்டம்பர் மாதம் 22-ந்தேதி ரோஜா தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில், அரிமா சங்கத்துடன் இணைந்து புற்றுநோயாளிகளுக்கான ரோஜா தினம் நேற்று கொண்டாடப்பட்டது.
இதில் ஆஸ்பத்திரியின் இயக்குனர் டாக்டர் எழிலரசி பங்கேற்று, புற்றுநோய் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு புரத சத்தை ஊக்குவிக்கும் 'புரோட்டின் எக்ஸ்', கலர் பென்சில்கள், வரைப்பட புத்தகம் போன்றவற்றை வழங்கினார்.
இதையடுத்து குழந்தைகள் ரத்த மற்றும் புற்றுநோய் பிரிவு துறைத் தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன், குழந்தைகள் புற்றுநோய் குறித்து தெரிவித்ததாவது :-
கொரோனா பேரிடர் காலத்துக்கு பிறகு குழந்தைகளை தாக்கும் புற்றுநோய் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனாவுக்கு முன்பு ஆண்டுக்கு 180-க்குள் இருந்த பாதிப்பு எண்ணிக்கை, தற்போது இந்த ஆண்டில் மட்டுமே 237 ஆக உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக கல்லீரல், நுரையீரல், சிறுநீரக வகை சார்ந்த புற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை கொரோனாவுக்கு முன் 50-க்குள் இருந்து வந்த நிலையில், இப்போது 70-ஐ தாண்டியுள்ளது.
குழந்தைகள் புற்றுநோயை பொறுத்தவரை 1 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் பாதிக்கப்படும் போது 100-ல் 4 பேர் மட்டுமே இதில் இருந்து மீண்டு வர வாய்ப்புள்ளது. உதாரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு, பிறந்த 3 நாட்களில் ஒரு குழந்தைக்கு புற்றுநோய் ஏற்பட்டு இறந்தது குறிப்பிடதக்கது. ஆனால் 1 வயதில் இருந்து 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் சிகிச்சை என்பது மாறுபட்டு இருக்கிறது.
அதன்படி தமிழகத்தில் 75 சதவீதம் பேர் குணமடைகின்றனர். முதலில் பொதுமக்களுக்கு புற்றுநோய் குணமாகும் என்ற நம்பிக்கை இருக்க வேண்டும். அதுவும் குழந்தைகளுக்கு முழுமையாக குணமடைய தீர்வு உண்டு என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். புற்றுநோய் தாக்கம் தெரிந்த பின்னர் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து 6 மாதம் சிகிச்சையில் இருக்க வேண்டும்.
மருந்துகள் சரியாக எடுத்துகொள்ள வேண்டும். நோய் தொற்று இல்லாமல் பார்த்துகொள்ள வேண்டும். எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரியில் முதல்-அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 60 சதவீதம் பேர் சிகிச்சை பெறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் மக்கள் தொடர்பு அதிகாரி கங்காதரன் உடன் இருந்தார்.