தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - ஓபிஎஸ் வலியுறுத்தல்

தகுதியுள்ள அனைத்து கவுரவ விரிவுரையாளர்களையும் உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

Update: 2024-08-03 23:38 GMT

கோப்புப்படம் 

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

உயர் கல்வியில் ஒரு மாநிலம் உயர்ந்த நிலையை அடைய வேண்டுமென்றால், கல்லூரிகளை துவக்கிவிட்டால் மட்டும் போதாது; அந்தக் கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்குரிய ஊதிய விகிதங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் மற்றும் போதுமான கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். இந்த நிலை மாணவ, மாணவியர் தரமான கல்வியை பெறும் வாய்ப்பினை உருவாக்குவதோடு, நாட்டிலுள்ள ஏழ்மை மற்றும் கல்வியறிவின்மை நீங்க வழிவகுக்கும். ஆனால். கடந்த மூன்றாண்டு கால தி.மு.க. ஆட்சியில் அரசு கல்லூரிகளில் இதுபோன்றதொரு நிலை ஏற்படுத்தப்படவில்லை.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 விழுக்காடு ஆசிரியர்கள்தான் நிரந்தரமாகப் பணியாற்றி வருகிறார்கள். மீதமுள்ள 80 விழுக்காடு ஆசிரியர்கள் கவுரவ விரிவுரையாளர்களாக 15 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் 50 வயதைக் கடந்தவர்கள். கற்பித்தல் பணியைத் தவிர, அரசின் உயர்கல்வித் திட்டங்களுக்கு வேண்டிய தகவல்களை மாணவர்களிடமிருந்து பெற்று அரசு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணியையும் இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், 80 விழுக்காடு இருக்கக்கூடிய கவுரவ விரிவுரையாளர்கள்தான் அரசுக் கல்லூரிகளின் ஆணிவேராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இல்லையென்றால், உயர் கல்வியே இல்லை என்ற நிலையில் அரசு கல்லூரிகள் இருக்கின்றன. அரசுக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றுபவர்கள் எல்லாம் முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் போன்றவற்றை படித்துள்ளதோடு, தேசிய தகுதித் தேர்வு, மாநில தகுதித் தேர்வு ஆகியவற்றிலும் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், இவர்கள் பெறும் தொகுப்பூதியம் மாதத்திற்கு வெறும் 25,000 ரூபாய் மட்டுமே. இந்தத் தொகுப்பூதியமும் 11 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிகக் குறைவான ஊதியம் கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகுப்பூதியமும் காலதாமதமாக தரப்படுவதாக கூறப்படுகிறது.

2019-ம் ஆண்டு தற்காலிக விரிவுரையாளர்களின் ஊதியம் தொடர்பாக பல்கலைக்கழக மானியக் குழு சில விதிமுறைகளை வகுத்ததாகவும், இதன் அடிப்படையில், தமிழ்நாட்டைத் தவிர பிற மாநிலங்களில் கவுரவ விரிவுரையாளர்களுக்கு 57,000 ரூபாய் அடிப்படை மாத ஊதியமாக வழங்கப்பட்டு வருவதாகவும், கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யும் வகையில் 2019-ம் ஆண்டு அரசாணை எண் 56 வெளியிடப்பட்டு, அதன் அடிப்படையில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட நிலையில், பொதுத் தேர்தலைத் தொடர்ந்து ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தினால் இந்த நடவடிக்கைகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டதாகவும் அரசுக் கலைக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

மேலும், பல்கலைக்கழக மானியக்குழு வகுத்த விதிமுறைகளுக்கேற்ப, கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் 50,000 ரூபாய் ஊதியம் வழங்கவும், 2019-ம் ஆண்டிலிருந்து அதற்கான நிலுவைத் தொகையை வழங்கவும் சென்னை ஐகோர்ட்டு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டிருந்ததாகவும், அதனையும் தி.மு.க. அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்றும் ஒருங்கிணைப்புக் குழு தெரிவிக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், அரசு கல்லூரிகளில் உள்ள 4,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கு போட்டித் தேர்வினை அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது கவுரவப் பேராசிரியர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்த முடியாமல் வறுமையில் கவுரவ விரிவுரையாளர்கள் வாடிக் கொண்டிருந்தாலும், தங்களுக்கு விடிவுகாலம் வரும், தங்களுடைய பணி நிரந்தரம் செய்யப்படும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், தி.மு.க. அரசின் எழுத்துத் தேர்வு என்ற முடிவு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

அரசுக் கல்லூரிகளில் பெரும்பாலான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், முதுகலைப் பட்டம், ஆய்வியல் நிறைஞர் பட்டம், முனைவர் பட்டம் போன்றவற்றை படித்து, தேசிய தகுதித் தேர்வு, மாநில தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்று, 15 ஆண்டுகளுக்கும் மேலாக கவுரவ விரிவுரையாளர்களாக பணியாற்றிவரும் 1,146 கவுரவ விரிவுரையாளர்களையும் நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை அரசு கலைக் கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு வைத்துள்ளது. இதனை வலியுறுத்தி 09-08-2024 அன்று சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் முன்பு ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டத்தினை மேற்கொள்ள உள்ளதாகவும் ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது. இவர்களுடைய கோரிக்கையில் நியாயம் உள்ளதாகவே நான் கருதுகிறேன். இவர்களை பணி நிரந்தரம் செய்வதன்மூலம் அவர்கள் மேலும் உத்வேகத்துடன் செயல்படுவார்கள். உயர் கல்வி உத்வேகமடையும்.

அரசுக் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களின் கல்வித் தகுதியையும், அனுபவத்தையும், தற்போது அவர்கள் பெற்றுவரும் மதிப்பூதியத்தையும், அவர்களின் வறுமை நிலையையும் கருத்தில் கொண்டு, தகுதியுள்ள அனைத்து கவுரவ விரிவுரையாளர்களையும் உடனடியாக நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை 2019-ம் ஆண்டு முதல் வழங்க வேண்டுமென்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்