ஜெர்மனியில் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களின் கண்காட்சி
ஜெர்மனியில் வீட்டு உபயோக ஜவுளி பொருட்களின் கண்காட்சி வருகிற 10-ந் தேதி தொடங்குகிறது. இதில், கரூரை சேர்ந்த 73 ஜவுளி நிறுவனங்கள் பங்கேற்பதாக ஜவுளி ஏற்றுமதியாளர் சங்கத்தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-;
ஜவுளி பொருட்களின் கண்காட்சி
உலக அளவில் மிகப்பெரிய வீட்டு உபயோக ஜவுளி பொருட்களின் கண்காட்சி ஜெர்மனி நாட்டின் பிராங்க்பர்ட் நகரில் வருகிற 10-ந் தேதி தொடங்கி 13-ந் தேதி வரை நடைபெறுகிறது. 4 நாட்கள் நடைபெறும் இந்த ஜவுளி கண்காட்சியில் பல்ேவறு நாடுகளிலிருந்து சுமார் 3,500 வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களது வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை காட்சிப்படுத்துகின்றன.
இந்தியாவிலிருந்து மட்டும் 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்களை காட்சிப்படுத்துகின்றன. இந்தியாவிலிருந்து அதிகபட்சமாக கரூர் நகரை சார்ந்த 73 ஜவுளி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் கலந்து கொண்டு புதிதாக தயாரிக்கப்பட்ட மாதிரி பொருட்களை காட்சிப்படுத்துகின்றன.
சில்லறை வர்த்தகம்
இந்த 73 நிறுவனங்களின் முதலாளிகள், விற்பனை பிரதிநிதிகள், வடிவமைப்பாளர்கள், இடைத்தரகர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஜெர்மனிக்கு செல்கிறார்கள். இது மட்டுமல்லாமல் கண்காட்சியை பார்வையிடுவதற்காக, ஜவுளி சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காகவும், ஜவுளி சந்தையில் புதிதாக வரப்போகும் பொருட்களை பார்வையிடுவதற்காக 100-க்கும் மேற்பட்டோர் கரூர் நகரிலிருந்து செல்கின்றார்கள். இவர்கள் அனைவரும், புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள மாதிரிகளுடன், இந்த வாரத்தின் இறுதியில் ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்கு செல்ல இருக்கின்றனர்.
உலகம் முழுவதிலும் இருந்து வீட்டு உபயோக ஜவுளி பொருட்களை வாங்குவதற்காக சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் மிகப்பெரிய நிறுவனங்கள் முதல் மிக சிறிய நிறுவனங்கள் வரை தங்களது பிரதிநிதிகளை இந்த கண்காட்சிக்கு அனுப்பி, காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஜவுளி பொருட்களை பார்வையிட்டு புதிய ஒப்பந்தங்களை ஏற்படுத்த உள்ளார்கள்.
புத்துயிர் பெரும்
இந்த கண்காட்சிக்கு பார்வையாளர்களாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவின் காரணமாக கடந்த சில மாதங்களாக மந்தமாக இருக்கும் வீட்டு உபயோக ஜவுளி தொழில் இந்த கண்காட்சிக்கு பிறகு புத்துயிர் பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஜவுளி கண்காட்சிக்கு செல்லும் அனைத்து நிறுவனங்களுக்கும், இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, கரூர் ஜவுளி நிறுவனங்கள் நிறைய ஒப்பந்தங்களை பெற்று, வெற்றியோடு திரும்ப வர வேண்டும் என்று ஜவுளித்துறை அமைச்சர் காந்தி, 'மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.