புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

Update: 2022-08-29 16:17 GMT

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

வேளாங்கண்ணி மாதா பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் கீழை நாடுகளின் 'லூர்து' நகர் என்று அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் 'பசிலிக்கா' என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்குகிறது. இந்த பேராலயம் எதிரே வங்க கடல் அமைந்திருப்பது மேலும் சிறப்பு சேர்க்கிறது.

ஆண்டு திருவிழா

மாதாவின் பிறந்த நாளான செப்டம்பர் 8-ந் தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இந்த திருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி செப்டம்பர் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஆண்டு திருவிழா பக்தர்கள் இன்றி எளியமுறையில் நடந்தது.

கொடியேற்றப்பட்டது

இந்த ஆண்டு வேளாங்கண்ணி மாதா பேராலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மாலை 5.45 மணிக்கு கடற்கரை சாலை, ஆரியநாட்டு தெரு வழியாக கொடி ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் கொடியை தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்து 6.40 மணிக்கு கொடியேற்றி வைத்தார். அப்போது பேராலயம் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்தது.

அதனைத்தொடர்ந்து வாணவேடிக்கைகள் நடந்தது. பக்கதர்கள் பலூன்களை பறக்கவிட்டு மகிழ்ந்தனர். பின்னர் பேராலய கலையரங்கில் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் மாதா மன்றாட்டு நற்கருணை ஆசீர், தமிழில் திருப்பலி ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

விழாவில் வேளாங்கண்ணி மாதா பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தன்ராஜ், ஆண்டோ ஜேசுராஜ், மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா, துணைத் தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன்.

பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, பேரூராட்சி முன்னாள் தலைவர் ஜூலியட் அற்புதராஜ், சமூக ஆர்வலர் கிங்ஸ்லி ஜெரால்டு மற்றும் மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் உள்பட லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பெரிய தேர்பவனி

விழா நாட்களில் தமிழ், மராத்தி, மலையாளம், ஆங்கிலம், கன்னடம், இந்தி, தெலுங்கு, கொங்கனி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. .விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி வருகிற 7-ந் தேதி(புதன்கிழமை) நடக்கிறது. 8-ந்தேதி ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். இதனால் வேளாங்கண்ணியில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே தென்பட்டது.

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடலில் குளிக்க தடை

திருவிழா நாட்களில் பக்தர்கள் கடலில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் பக்தர்கள் கடலில் குளிப்பதை தடு்க்க கடற்கரையில் மரக்கட்டைகளால் தடுப்பு அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்