5 வட்டாரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை; குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை நீடிப்பு

தென்காசி மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் மழையின் காரணமாக 5 வட்டாரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

Update: 2023-07-07 18:45 GMT

தென்காசி மாவட்டத்தில் நேற்று பெய்த தொடர் மழையின் காரணமாக 5 வட்டாரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டது.

பலத்த மழை

குற்றாலத்தில் தற்போது சீசன் மிகவும் நன்றாக உள்ளது. சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. வெயிலே இல்லை. குளிர்ந்த காற்று வேகமாக வீசி வருகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு தினமும் வந்து செல்கிறார்கள்.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.

நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நேற்று காலையில் அனைத்து அருவிகளிலும் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.

குளிக்க தடை நீட்டிப்பு

இந்த நிலையில் மதியத்திற்கு பிறகு ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவியில் வெள்ளம் குறைந்ததால், அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். புலி அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளித்துச் சென்றனர். ஆனால் மெயின் அருவியில் மட்டும் வெள்ளப்பெருக்கு குறையவில்லை.

எனவே, அங்கு நேற்று குளிக்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் மெயின் அருவிக்கு குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் அவர்கள், மற்ற அருவிகளில் உற்சாகமாக குளித்துச் சென்றனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், கீழப்பாவூர், கடையம் ஆகிய 5 வட்டாரங்களில் நேற்று பலத்த மழை கொட்டியது. இதனால் அந்த வட்டாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நேற்று ஒருநாள் விடுமுறை அறிவித்து கலெக்டர் துரை. ரவிச்சந்திரன் உத்தரவிட்டார்.

அதன்படி நேற்று 5 வட்டாரங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்