வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளில் நீர்வரத்து குறைந்தது

Update: 2023-08-18 16:43 GMT


உடுமலையை அடுத்த வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளில் உற்பத்தியாகின்ற ஆறுகளில் நீர்வரத்து குறைந்ததால் மலைவாழ் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

வனப்பகுதியில் விவசாயம்

உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள தளிஞ்சி, தளிஞ்சிவயல், ஆட்டுமலை, ஈசல்தட்டு, பொருப்பாறு, கோடந்தூர், குருமலை, மாவடப்பு, மஞ்சம்பட்டி, கீழானவயல், கருமுட்டி, பூச்சகொட்டாம்பாறை, குளிப்பட்டி, முள்ளுப்பட்டி உள்ளிட்ட மலைவாழ் குடியிருப்புகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

இவர்கள் விவசாயத்தை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். அதுவும் இயற்கை விவசாயத்திற்கு காலங்காலமாக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். விவசாயம் மற்றும் குடிநீருக்கு தேவையான தண்ணீரை மலைவாழ் மக்கள் ஆறுகள் மூலமாக பூர்த்தி செய்து கொள்கின்றனர்.

விவசாயம் கேள்விக்குறி

நெல், தினை, சாமை, ராகி, இஞ்சி, மரவள்ளி, தென்னை, வாழை, எலுமிச்சை, பட்டர் பீன்ஸ் உள்ளிட்ட பயிர்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படுகின்றன. வடுமாங்காய், நெல்லிக்காய், தேன், கடுக்காய், சீமாறு, தைல புல் உள்ளிட்டவை சீசனுக்கு ஏற்றாற்போல் வனப்பகுதியில் இயற்கையாக விளைகின்றன. இதற்கு பருவமழை ஒத்துழைப்பு கொடுத்து நீர் வரத்தை அளித்தால் மட்டுமே சாத்தியமாகும் இல்லை என்றால் விவசாயம் வனப்பகுதியில் கேள்விக்குறியாகி விடுகிறது. கோடை காலத்தில் ஆடு, மாடு, கோழி வளர்ப்பும் சீசனில் தைலம் காய்ச்சுதல், தேன்எடுத்தல் உள்ளிட்ட சுயதொழில்களில் மலைவாழ் மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதுவும் பெரிதளவில் வருமானத்தை அளிப்பதில்லை. இதனால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் உயராமல் ஏற்றத்தாழ்வு உடனே இருந்து வருகிறது.

ஆறுகளில் நீர்வரத்து குறைந்தது

இந்த சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்கு பருவமழை செய்தது.இதன் காரணமாக ஆறுகளில் ஓரளவிற்கு நீர்வரத்து ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து மலைவாழ் மக்கள் நிலத்தை உழவு செய்து பீன்ஸ் சாகுபடி செய்துள்ளனர்.தற்போது செடிகள் விளைச்சலை அழித்து வருகிறது. அதை பராமரிப்பு செய்து வருமானம் ஈட்டுவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் வெப்பத்தின் தாக்குதல் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக ஆறுகளில் ஏற்பட்ட நீர்வரத்து வேகமாக குறைந்து வருகிறது. இதனால் விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை பெறுவதில் மலைவாழ் மக்கள் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அத்துடன் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்களும் கருகும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.இதனால் மலைவாழ் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். மேலும் மலைப்பொழிவை எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் செய்திகள்