தேனி-விருதுநகர் மாவட்டத்தை இணைக்கும் மலைப்பாதை திட்டம் நிறைவேறுமா?; பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தேனி-விருதுநகர் மாவட்டத்தை இணைக்கும் மலைப்பாதை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2023-03-11 20:30 GMT

பயணம் என்பது அன்றாடம் மக்களிடம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. பயண நேரமும், தூரமும் குறையும்போது அது மக்களுக்கு பல பயன்களை தருகிறது. விவசாயிகளின் பயண நேரம் குறைந்தால், உற்பத்தியான விளை பொருட்கள் வாடும் முன்பே சந்தைக்கு சென்றடையும். மாணவ-மாணவிகளின் பயண நேரம் குறைந்தால் அவர்கள் கற்பதற்கான நேரம் அதிகம் கிடைக்கும்.

தேனி, விருதுநகர்

அந்த வகையில் தேனி-விருதுநகர் மாவட்டங்களுக்கு இடையிலான பயண நேரத்தை குறைப்பதற்காக புதிய சாலை திட்டத்தை பல ஆண்டுகளாக எதிர்பார்க்கின்றனர் இருமாவட்ட மக்கள். அதாவது, தேனி மாவட்டம், வருசநாடு அருகே காமராஜபுரம் கிராமம் உள்ளது. வருசநாட்டில் இருந்து விருதுநகர் செல்ல வேண்டும் என்றால் ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி வழியாக சுமார் 112 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்ய வேண்டும். இந்த பகுதிகளில் இருந்து விருதுநகர், ஸ்ரீவில்லிப்புத்தூர், சிவகாசி, ராஜபாளையம் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் இவ்வாறு அதிக தூரம் பயணம் செய்ய வேண்டியது உள்ளது.

மலைப்பாதை திட்டம்

அதே நேரத்தில் காமராஜபுரத்தில் இருந்து விருதுநகர் மாவட்டம் பிளவக்கல் வழியாக கிழவன்கோவில் பகுதிக்கு சாலை அமைத்தால் குறுகிய தூரத்தில் சென்று விடலாம். இடையில் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் மட்டும் மலைப்பகுதியில் சாலை அமைத்தால் விருதுநகர் மாவட்டத்துக்கு எளிதில் சென்று விடலாம்.

இதற்காக காமராஜபுரம்-கிழவன் கோவில் மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று இருமாவட்ட மக்களும் கால் நூற்றாண்டுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2002-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு, தமிழக முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா, இந்த மலைப்பாதை திட்டப்பணிக்கு முயற்சி மேற்கொண்டார்.

பிளவக்கல் அணை

அப்போது, தேனி மாவட்ட எல்லை வரை சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வனத்துறை முட்டுக்கட்டை காரணமாக மேற்கொண்டு பணிகள் நடக்கவில்லை. வனத்துறை, நெடுஞ்சாலைத்துறையினர் பல கட்டமாக இங்கு ஆய்வு செய்துள்ளனர். ஆனால், இதுவரை சாலை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கிடையே இந்த வனப்பகுதி மேகமலை வன உயிரின காப்பகமாக அறிவிக்கப்பட்டது. பின்னர், மேகமலை-ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டது. இதனால், மலைப்பாதை திட்டத்தை செயல்படுத்துவதில் சிக்கல் உருவானது.

கரடு முரடான இந்த மலைப்பாதையில் மக்கள் நடந்து சென்று வருகின்றனர். வன விலங்குகள் நடமாட்டம் இருப்பதால் இந்த பாதையில் மக்கள் தனியாக நடந்து செல்வதை தவிர்க்கின்றனர். குழுவாக நடந்து சென்று வருகின்றனர். இந்த வழியாக செல்லும் போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பிளவக்கல் அணை எழில்கொஞ்சும் வகையில் காட்சி அளிக்கிறது.

விளைபொருட்கள்

வருசநாடு, காமராஜபுரம், வெள்ளிமலை போன்ற பகுதிகளில் முந்திரி, தக்காளி, கத்தரிக்காய், பீன்ஸ், அவரை, இலவம்பஞ்சு போன்றவை அதிக அளவில் விளைச்சல் அடைகின்றன. அவற்றை சந்தைக்கு எடுத்துச் செல்வதற்கு அதிக தூரம் பயணம் செய்ய வேண்டியது உள்ளதால், சரக்கு போக்குவரத்து செலவுக்கு கூட வருமானம் கட்டுப்படியாகவில்லை. எனவே இந்த சாலை அமைக்கப்பட்டால் எளிதிலும், அதிக செலவு இல்லாமலும் விளைப்பொருட்களை 2 மாவட்டங்களில் உள்ள முக்கிய மார்க்கெட்டுகளுக்கு எடுத்துச்செல்ல முடியும். விவசாயிகளுக்கும் செலவு குறைந்து வருவாய் அதிகரிக்கும்.

இதனால் காமராஜபுரம்-கிழவன்கோவில் மலைப்பாதை திட்டம் நிறைவேற்றப்படுமா? என்று இருமாவட்ட மக்களும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இதுதொடர்பாக பொதுமக்கள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-

விவசாயிகள் பயனடைவார்கள்

காமராஜபுரத்தை சேர்ந்த சுப்பையன் கூறுகையில், "மலைப்பகுதியில் கஷ்டப்பட்டு விவசாயம் செய்கிறோம். அதை எடுத்துச் செல்வதற்கு அதிக செலவு ஆகிறது. இந்த சாலை அமைத்தால் விருதுநகர் மார்க்கெட்டுக்கு எளிதில் விளை பொருட்களை கொண்டு செல்வோம். கட்டுப்படியான விலை கிடைக்கும். விருதுநகர் பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் சென்று படிக்கவும் இப்பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்" என்றார்.

காமராஜபுரத்தை சேர்ந்த தங்கமலை கூறுகையில், "இந்த சாலை அமைத்தால் கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன்பெறும். இருமாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து அதிகரிக்கும். விவசாயம், கல்வி, மருத்துவம் என அனைத்து வகையிலும் இந்த சாலை பயனுள்ளதாக இருக்கும். ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே இந்த சாலை அமையும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் பணிகள் தொடங்கிய வேகத்தில் முழுமை பெறாமல் போய்விட்டது. தற்போதைய அரசு எங்களின் கோரிக்கை மீது கவனம் செலுத்தி எங்களுக்கு சாலை அமைத்துக் கொடுக்க முன்வர வேண்டும்" என்றார்.

வர்த்தகம் மேம்படும்

காமராஜபுரத்தை சேர்ந்த முருகன் கூறுகையில், "காமராஜபுரம் என்ற எங்கள் ஊரின் பெயரில் காமராஜர் இருக்கிறார். காமராஜர் பிறந்த மாவட்டம் விருதுநகர். இந்த மலைப்பாதை திட்டம் நிறைவேற்றப்பட்டால் அது பெருமைமிக்க சாலையாக அமையும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உறவினர்களை பார்க்க வேண்டும் என்றால் பயணம் செய்யவே ஒரு நாள் ஆகி விடுகிறது. இந்த சாலை அமைத்தால் மோட்டார் சைக்கிளில் சென்று கூட பார்த்துவிட்டு வந்து விடலாம். இருமாவட்டங்களுக்கு இடையிலான வர்த்தகம் மேம்படவும் இந்த சாலை உறுதுணையாக இருக்கும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்