மலைவாழ் மக்கள் சங்கத்தினர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம்

ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் பள்ளி மாணவர்களுடன் இசைவாத்தியங்களை அடித்தவாறு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-27 11:13 GMT

ஆரணி கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் பள்ளி மாணவர்களுடன் இசைவாத்தியங்களை அடித்தவாறு ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பாக ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் வி.ஏ.கே.நகர் செல்லும் சாலையின் மையத்தில் தரையில் அமர்ந்து கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிமாறன் தலைமை தாங்கினார். ஜமுனாமரத்தூர் தாலுகாவை சேர்ந்த நிர்வாகிகள் சதீஷ்குமார், சற்குணம், ராஜாமணி, செல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சாமி நடராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, வன உரிமைச் சட்டத்தை தீவிரமாக அமுல்படுத்த நடவடிக்கை ''எடுக்க வேண்டும், வனவிலங்குகளால் ஏற்படும் மனித உயிரிழப்பு, பயிர் இழப்புகளுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை அதிகப்படுத்த வேண்டும், சொந்த வீடு இல்லாத பழங்குடி மக்களுக்கு கேரள அரசை போல் 10 லட்சத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும்.

சாதிச்சான்று

ஆரணி தச்சூர் கிராமத்தில் பழங்குடி இருளர் இன மக்களுக்கு தொகுப்பு வீட்டை கட்டிக் கொடுக்க வேண்டும், ஆரணி கோட்டத்தில் உள்ள அனைத்து பழங்குடி மக்களுக்கும் நிலுவையில் உள்ள சாதி சான்று காலதாமதம் இன்றி வழங்கிட வேண்டும்,

ஆரணி கோட்டத்தில் நிலுவையில் உள்ள வீட்டு மனை பட்டா உடனடியாக வழங்க வேண்டும், கலசபாக்கம், போளூர், ஆரணி வட்டங்களில் உள்ள பையூர், சந்தவாசல், காட்டு நாயக்கன் பழங்குடி இனச் சான்று வழங்கப்பட வேண்டும்'' என வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 300-க்கும் மேற்பட்ட மக்கள் பள்ளி குழந்தைகளையும் அழைத்து வந்து குடும்பத்துடன் கலந்து கொண்டனர். ஆரணி கார்னேசன் பள்ளியிலிருந்து மலைவாழ் மக்களின் பழங்குடி இசை வாத்தியங்களுடன் ஊர்வலமாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்