உயர்கல்வி வழிகாட்டுதல் சிறப்பு முகாம்
உடையார்பாளையம் அருகே உயர்கல்வி வழிகாட்டுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது.;
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்வுக்கு படி உயர்கல்வி வழிகாட்டுதல் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமை தாங்கினார். ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க. கண்ணன் முன்னிலை வகித்தார். முகாமில், 2022-2023-ம் கல்வியாண்டில் பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்ற 345 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இதில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளில் விண்ணப்பித்தல், சேர்க்கை, கல்வி கடனுதவி, முதல் பட்டதாரி சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்று, வருமான சான்று மற்றும் விடுதியில் தங்கி படித்தல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டது. மேலும் இம்முகாமில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகளில் மேற்படிப்பு மேற்கொள்வதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு மாணவர்களிடமிருந்து பூர்த்தி செய்து பெறப்பட்டது.
இதேபோன்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் நடத்தப்பட்டு வரும் விடுதிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் தேவைப்படும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு, மாணவர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டது. முகாமில் முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. பரிமளம், மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன், பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.