புத்தக கண்காட்சியில் எஸ்.சி/எஸ்.டி. பதிப்பாளர்கள் இடம்பெறுவதை உறுதி செய்யக் கோரிய மனு - அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
பட்டியலின மற்றும் பழங்குடியினத்தோர் நடத்தும் பதிப்பகங்களுக்கு போதிய அரங்குகள் ஒதுக்குவதில்லை என மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில் செந்தமிழ்செல்வி மற்றும் பிரதீப் ஆகியோர் தாக்க செய்த மனுக்களில், 95 லட்சம் ரூபாய் தமிழக அரசின் நிதியுடன் பபாசி அமைப்பால் சென்னை புத்தக கண்காட்சி நடத்தப்படும் நிலையில், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் என்ற அடிப்படையில் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தோர் நடத்தும் பதிப்பகங்களுக்கு போதிய அளவில் அரங்குகள் ஒதுக்குவதில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.
புத்தக கண்காட்சி ஒருங்கிணைப்பு குழுவில் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடமளிக்க வேண்டும் என மாநில எஸ்.சி/எஸ்.டி. ஆணையம் அளித்த பரிந்துரையை நிறைவேற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், வழக்கில் பபாசியை எதிர்மனுதாரராக சேர்த்து, இது சம்பந்தமாக பதிலளிக்கும்படி தமிழக அரசு மற்றும் பபாசிக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 2-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.