ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

Update: 2023-01-12 10:30 GMT

பொள்ளாச்சி

சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உறுதிமொழி

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் சாலை பாதுகாப்பு வார விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை தாங்கினார். சப்-கலெக்டர் பிரியங்கா, உதவி போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கிவைத்தார். இதை தொடர்ந்து சீட் பெல்ட், ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் போலீசார், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதை தொடர்ந்து வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் தலைமை தாங்கி தொடங்கிவைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வாகன உரிமம்

இருசக்கர வாகன விபத்துகளில் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாததால் தான் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிய வேண்டும். கிரிக்கெட் வீரர் ரிஷப் பாண்ட் கார் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் தான் ஏர்பலூன் வெளியாகி தப்பினார். எனவே போக்குவரத்து விதிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும்.

வாகனங்களை விற்பனை செய்யும் போது உரிமம் மாற்றம் செய்ய வேண்டும். ஏதாவது சட்டத்திற்கு புறம்பான சம்பவங்கள் நடந்தால் வாகனத்தின் உரிமையாளர் தான் அதற்கு பொறுப்பாகும். பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விதிகளை தெரிந்து கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

வால்பாறை

பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், 32-வது சாலை பாதுகாப்பு மாத தொடக்க நிகழ்ச்சி வால்பாறையில் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ரவிக்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது, மதுபோதையில் வாகனங்களை ஓட்டக்கூடாது, சாலை விதிகளை மதிப்பது, மலைப்பாதையில் மேலே வரும் வாகனங்களுக்கு வழி விடுவது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் உரிய தகுதி சான்று பெற்று வாகனங்களை ஒட்ட வேண்டும் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ரவிக்குமார் வழங்கினார். வால்பாறை காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் ஆட்டோ ஓட்டுனர்கள், அரசு பஸ் டிரைவர், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்