கனரக வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
புளியரை சோதனை சாவடியில் கனரக வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கோட்டை:
புளியரை சோதனை சாவடியில் கனரக வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கனிமவள கடத்தல் புகார்
தென்காசி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்கள் சட்ட விரோதமாக கடத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு 10 சக்கர வாகனங்கள் மற்றும் அதற்கு குறைவான சக்கரங்களை உடைய வாகனங்கள் மட்டும் கனிம வளங்களை ஏற்றிச் செல்ல வேண்டும் எனவும், அதற்கு மேல் சக்கரங்களை உடைய வாகனங்களுக்கு அனுமதி கிடையாது எனவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்திருந்தது.
இதுதொடர்பாக இந்திய லாரி டிரைவர் அசோசியேஷன் சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 19-ந் தேதி வழக்கு விசாரணையின்போது கனரக வாகனங்கள் இயக்கம் குறித்த தென்காசி மாவட்ட நிர்வாகம் விதித்த உத்தரவுக்கு கோர்ட்டு தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்தது.
போலீசார் தடுத்து நிறுத்தினர்
இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவு நகல் காப்பியை வைத்துக் கொண்டு நேற்று 10-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் தென்காசி மாவட்டத்தில் இருந்து கனிம வளங்களை ஏற்றிக் கொண்டு கேரளாவிற்கு செல்ல முயன்றது.
அப்போது புளியரை சோதனை சாவடியில் இருந்த போலீசார் அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசார், கோர்ட்டு உத்தரவானது தங்களுக்கு முறையாக வரவில்லை என்றும், அதுவரை கேரளாவுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறினர். இதனால் நீண்ட வரிசையில் கனரக வானங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் சோதனை
இதைத்தொடர்ந்து லாரி டிரைவர் சங்கத்தின் சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டு உத்தரவு வந்தவுடன் 10-க்கும் மேற்பட்ட சக்கரங்களை கொண்ட கனரக வாகனங்களை அனுப்பி வைப்பதாக தென்காசி மாவட்ட நிர்வாகமும், காவல்துறை சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து எல்லைப் பகுதியில் காத்துக் கொண்டிருந்த கனரக வாகனங்களை போலீசார் உரிய சோதனைகளுக்கு பிறகு கேரளாவிற்கு அனுப்பி வருகின்றனர்.