கொடைக்கானல் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய கனமழை; கயிற்றைக் கட்டி ஆற்றைக் கடந்த விவசாயிகள்..!
கொடைக்கானல் பகுதியில் இடி மின்னலுடன் பெய்த கனமழையால் பேத்துப்பாறை வயல் பகுதியிலுள்ள பெரிய ஆற்றில் கரைபுரண்டு வந்த வெள்ளம்.;
கொடைக்கானல்:
கொடைக்கானல் பகுதியில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்றும் காலை 11 மணி முதலே விட்டு விட்டு சாரல் மழை பெய்த நிலையில் பிற்பகல் 1.30 மணி முதல் சுமார் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக காதைப் பிளக்கும் சத்தத்துடன் கூடிய இடியுடன் கூடிய கன மழை கொட்டி தீர்த்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியது. அத்துடன் பாக்கியபுரம் பகுதியில் உள்ள ஒரு ஆலயத்தின் உள்ளே தண்ணீர் புகுந்தது. மேலும் வில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பேத்துப்பாறை வயல் பகுதியிலுள்ள பெரியாற்றில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதனால் மறுபுறம் வசித்து வந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
அவர்கள் ஆற்றின் குறுக்கே கயிற்றைக் கட்டி தங்கள் விளைவித்த விவசாய பொருட்களையும், பொதுமக்களையும் கொண்டு வந்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,
அடிக்கடி பெய்யும் கனமழை காரணமாக தாங்கள் ஆற்றை கடக்க முடியாமல் பெரும் சிரமம் அடைவதாகவும் ஆற்றில் கயிற்றைக் கட்டி உயிரை பனையம் வைத்து சென்று வருவதாகவும் எனவே உடனடியாக அப்பகுதியில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே கனமழை காரணமாக நகரை ஒட்டி உள்ள பல்வேறு அருவிகளில் வெள்ளம் கொட்டியது. அத்துடன் நட்சத்திர ஏரியிலிருந்து இன்றும் உபரி நீர் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிலையில் மாலையில் மீண்டும் சாரல் மழை பெய்தது. இதனால் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியதாக தெரிகிறது என பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் வருகை மேலும் அதிகரித்து காணப்பட்டது. மழையில் நனைந்தபடியும் குளிரில் நடுங்கியபடியும் சுற்றுலா இடங்களை கண்டு களித்தனர்.