ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர் மழை: சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அணை, ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. அதன்படி பெரியகுளம் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க நேற்று முன்தினம் முதல் தடை விதிக்கப்பட்டது. இதே போல ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சுருளி அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது அருவியில் நீருடன் சேர்ந்து கற்களும் விழுகிறது. இதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். அருவியில் நீர்வரத்து சீராகும் வரை சுருளி ஆற்றங்கரையோரம் சுற்றுலா பயணிகள் இறங்கி குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.