மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: குண்டாறு அணை நிரம்பியது
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக குண்டாறு அணை நிரம்பியது.;
தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கனமழை கொட்டியது. இந்த நிலையில் மாவட்டத்தில் நேற்று பகலில் சாரல் மழை பெய்தது. சில இடங்களில் மிதமான மழை பெய்தது. தொடர்மழை காரணமாக செங்கோட்டை அருகே குண்டாறு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 135 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென்று உயர்ந்தது. நேற்று முன்தினம் அணையில் 26.75 அடி தண்ணீர் இருந்த நிலையில் சுமார் 10 அடி உயர்ந்து நேற்று முழுகொள்ளளவான 36.10 அடியை எட்டி நிரம்பி வழிந்தது. தொடர்ந்து அணைக்கு வந்த தண்ணீர் அப்படியே உபரிநீராக மறுகால் பாய்ந்து செல்கிறது.
இதேபோல் 132 அடி உயரம் கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 9 அடி உயர்ந்து நேற்று 66 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 125 கன அடியாக உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 33.50 அடியில் இருந்து 45 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 368 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 5 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ராமநதி அணை நீர்மட்டம் 40 அடியில் இருந்து 50 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 160 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 3 கன அடியாகவும் உள்ளது. கருப்பாநதி அணை நீர்மட்டம் 32 அடியாக உள்ளது.