மானாமதுரை பகுதியில் கனமழை:வாரச்சந்தைக்குள் புகுந்த மழைநீர் வியாபாரிகள், பொதுமக்கள் அவதி

மானாமதுரை பகுதியில் பெய்த கனமழையால் வாரச்சந்தைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

Update: 2023-07-13 19:00 GMT

மானாமதுரை

மானாமதுரை பகுதியில் பெய்த கனமழையால் வாரச்சந்தைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கனமழை

சிவகங்கை மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக மாலை வேளைகளில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, தேவகோட்டை, திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் காலையில் வழக்கமான அளவு வெயில் தாக்கம் காணப்பட்ட நிலையில் மாலையில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. பின்னர் திடீரென மானாமதுரை பகுதியில் நேற்று மாலை 4 மணிக்கு பலத்த மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நீடித்ததால் நகரில் ஆங்காங்கே உள்ள சாலைகள் முழுவதும் தண்ணீர் தேங்கியது. மானாமதுரையில் புதிதாக தொடங்கப்பட்ட இடத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். நேற்றும் வழக்கம் போல் இந்த இடத்தில் வாரச்சந்தை நடைபெற்றது.

சந்தைக்குள் புகுந்த தண்ணீர்

நேற்று பெய்த இந்த கனமழையால் புதிதாக கட்டப்பட்ட இந்த வாரச்சந்தைக்குள் மழைநீர் புகுந்து தேங்கி நின்றது. இதனால் சந்தை முழுவதும் முட்டி அளவு தண்ணீர் தேங்கியது. தண்ணீரில் நின்றபடி வியாபாரிகளும், காய்கறிகள் வாங்க வந்த பொதுமக்களும் இறங்கி சென்றதால் கடும் அவதியடைந்தனர். இனி மழை காலமாக உள்ளதால் நகராட்சி நிர்வாகம் சார்பில் வாரச்சந்தையில் மழைநீர் தேங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாரச்சந்தை அருகில் வைகையாறு இருப்பதால் சந்தையில் தேங்கும் மழைநீர் வைகையாற்றில் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதேபோல் பலத்த மழை காரணமாக மானாமதுரை மண்பாண்டம் தொழில் செய்யும் இடத்தில் தண்ணீர் குளம்போல் தேங்கியதால் நேற்று மண்பாண்டம் செய்யும் பணியும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து வெயிலில் காய வைக்கப்பட்ட மண்பாண்ட பொருட்களை தொழிலாளர்கள் மழைநீர் படாதவாறு பாதுகாப்பாக வைத்தனர். காரைக்குடி பகுதியிலும் காலை வழக்கம் போல் வெயில் தாக்கம் இருந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

Tags:    

மேலும் செய்திகள்