டெல்டா மாவட்டங்களில் கனமழை: ஆயிரக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கின

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மழை காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

Update: 2022-09-01 20:48 GMT

தஞ்சாவூர்,

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இந்த மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. நேற்றும் இந்த மழை நீடித்தது.

நேற்று காலை முதல் பெய்யத்தொடங்கிய மழை மதியம் வரை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

இந்த மழை காரணமாக நேற்று தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர்.

நெற்பயிர்கள் சாய்ந்தன

டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இதில் முன்பட்ட குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் மழை காரணமாக அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன.

டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கருக்கும் மேல் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி காணப்படுகிறது. பல இடங்களில் நெல்மணிகள் முளைக்கத்தொடங்கி விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்