குன்னூரில் கனமழை; மண்சரிவு

குன்னூரில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் டேன்டீ குடியிருப்புக்கு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2023-03-29 18:45 GMT

குன்னூர், 

குன்னூரில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் டேன்டீ குடியிருப்புக்கு செல்லும் சாலையில் மண் சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கனமழை

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் உறை பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் வறட்சியான காலநிலை நிலவியது. மேலும் பசுமையாக இருந்த தேயிலை செடிகள் கருகின. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூர் பகுதியில் கோடை மழை பெய்ய தொடங்கியது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவில் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது.

இந்த மழை தொடர்ந்து அதிகாலை வரை கனமழையாக பெய்தது. இதனால் குன்னூரில் தாழ்வான பகுதிகளில் உள்ள சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக டால்பின் நோஸ் செல்லும் சாலையில் உள்ள குன்னூர் நகராட்சிக்கு உட்பட்ட சி.எம்.எஸ்.-ல் இருந்து டேன்டீ செல்லும் சாலையில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. அந்த சாலையில் மண், செடி, கொடிகள் சாலையே தெரியாத வகையில் மூடி இருந்தன.

போக்குவரத்து பாதிப்பு

இதனால் வாகனங்கள் செல்ல முடியாத வகையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு, சாலையில் கிடந்த மண் அகற்றப்பட்டது. அதன் பின்னர் போக்குவரத்து சீரானது.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, சமீப காலமாக சில இடங்களில் விதிமீறிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், கட்டிடங்கள் அனுமதி இல்லாமல் கட்டப்படுவதால், இதுபோன்ற மண் சரிவு ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டி உள்ளனர். எனவே, நகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதேபோல் ஊட்டி அருகே வேலிவியூ பகுதி முதல் குன்னூர் வரை நேற்று பலத்த மழை பெய்தது. ஊட்டியில் இதமான காலநிலை நிலவியது. இந்த சீதோஷ்ண காலநிலையை அனுபவித்தபடி சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்