வேலூரில் பலத்த மழை

வேலூரில் பலத்த மழை பெய்தது

Update: 2022-08-22 18:22 GMT

வேலூரில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

இன்று பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் மாலை 5 மணி அளவில் திடீரென நகரில் சில இடங்களில் லேசான மழை பெய்தது. தொடர்ந்து மழை வலுக்க தொடங்கியது.

பின்னர் இரவு 7.30 மணி அளவில் மீண்டும் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்தது.

இதனால் வேலூர் மதிநகர், திடீர் நகர், கன்சால்பேட்டை, காட்பாடி வி.ஜி.ராவ் நகர் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. சாலை பள்ளங்களிலும் தண்ணீர் தேங்கி காணப்பட்டது.

மழை காரணமாக பாதாள சாக்கடை மற்றும் கால்வாய் பணிகள் நடந்து வரும் தெருக்கள் அனைத்தும் சேறும், சகதியுமாக காட்சி அளித்தன.

இதனால் அந்த சாலைகளில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்

 மழையினால் இரவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்