ஊத்துக்கோட்டை, திருவள்ளூரில் பலத்த மழை
ஊத்துக்கோட்டை, திருவள்ளூரில் பலத்த மழை பெய்தது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. புழுக்கம் காரணமாக பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை 11 மணிக்கு கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்ய ஆரம்பித்தது. மதியம் ஒரு மணி வரை கன மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பாய்ந்தது. குடைகள் இல்லாமல் வெளியே சென்றவர்கள் நனைந்தபடி வீடுகளுக்குச் சென்றனர். கனமழையால் தாழ்வான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி நின்றது.
திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான ஈக்காடு, புட்லூர், மணவாளநகர், ஒண்டிக்குப்பம், பட்டரை, மேல்நல்லாத்தூர், திருப்பாச்சூர், கடம்பத்தூர், பேரம்பாக்கம், அகரம், புதுமாவிலங்கை போன்ற சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் பரவலாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மழையின் காரணமாக சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியதால் நீண்ட நாட்களாக வெயிலால் அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.