மயிலாடுதுறை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த 2 நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக நேற்று முன்தினம் பள்ளி-கல்லூரிகளுக்கு மாவட்ட நிர்வாகம் விடுமுறை அளித்தது. இந்தநிலையில் மயிலாடுதுறையில் நேற்று காலை முதல் மதியம் வரை மழை பெய்யவில்லை. ஆனால், மாலை 4 மணியளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. சிறிது நேரத்தில் பலத்த மழை பெய்தது. இந்த மழை மாலை 6 மணி வரை நீடித்தது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினர். மயிலாடுதுறையில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.