கீழ்வேளூர், திருமருகல் பகுதிகளில் பலத்த மழை

கீழ்வேளூர், திருமருகல் பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-10-10 18:45 GMT

சிக்கல்:

சுட்டெரித்த வெயில்

நாகை மாவட்டத்தில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகம் இருந்தது. வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் பகல் நேரத்தில் வெளியே வராமல் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம், இரவிலும் தென்படுகிறது. இரவில் மின்விசிறியில் அனல்காற்று வீசுகிறது.

பலத்த மழை

இந்த நிலையில் கீழ்வேளூர், சிக்கல் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மதியம் பலத்த மழை பெய்தது. கடம்பங்குடி, ஆணைமங்கலம், ஓர்குடி, கோகூர், வடகரை, அகரகடம்பனூர், கோவில்கடம்பனூர், ஆழியூர், சிக்கல், பொரவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மேலும் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

திருமருகல்-நாகூர்

இதேபோல் திருமருகல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான திட்டச்சேரி, அம்பல், போலகம், திருக்கண்ணபுரம், கங்களாஞ்சேரி, குத்தாலம், நரிமணம், உத்தமசோழபுரம், காரையூர் பகுதிகளில் நேற்று மதியம் 1 மணிக்கு பலத்த மழை பெய்தது. இந்த மழை 1 மணி நேரம் நீடித்தது.திருமருகல் ஒன்றிய பகுதியில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த குறுவை நெற்பயிர்கள் மழையால் சாய்ந்து சேதம் அடையும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நாகூர், தெத்தி, மேல நாகூர், முட்டம், பனங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது.

Tags:    

மேலும் செய்திகள்