கரூரில் சாரல் மழை

கரூரில் சாரல் மழை பெய்தது.

Update: 2023-06-13 18:51 GMT

சாரல் மழை

கரூரில் நேற்று காலை முதல் வெயில் சுட்டெரித்தது. இந்தநிலையில் மாலை 6.30 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு காற்றுடன் சாரல் மழை பெய்தது. இந்த மழை கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்தது.

இதேபோல் குளித்தலை பகுதியில் நேற்று மாலை பலத்த காற்று வீசியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசாக மழை பெய்தது. பலத்த காற்றின் காரணமாக சாலையில் பயணிக்க முடியாமல் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகினர். காற்றுடன் மண் கலந்து வீசியதால் வாகனத்தை செலுத்த முடியாத காரணத்தால் வாகன ஓட்டிகள் திணறினர். இந்த காற்றால் திருச்சி- கரூர் மாநில நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே உள்ள குறப்பாளையம் பகுதியில் சாலையோரம் இருந்த வேப்பமரம் ஒன்று சாய்ந்து சாலையின் நடுவே விழுந்தது.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து குளித்தலை போலீசார் பொக்லைன் எந்திரம் மூலம் மரத்தை அப்புறப்படுத்தினார். இதனால் இந்த சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பலமான காற்று வீசியதின் காரணமாக குளித்தலை மற்றும் குளித்தலை சுற்றி உள்ள பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் ஒடிந்து விழுந்து சேதமானது. இதனால் மின் தடை ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு மின் வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று ஒடிந்து விழுந்த மின்கம்பங்களை அகற்றும் பணியில் துரிதமாக ஈடுபட்டனர்.

வியாபாரம் பாதிப்பு

நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கந்தம்பாளையம், கொங்கு நகர், காகிதபுரம், மூர்த்தி பாளையம், மூலிமங்கலம், புன்னம்சத்திரம், புன்னம், உப்பு பாளையம், ஓலப்பாளையம், கரைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 6 மணியளவில் லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.

அதனை தொடர்ந்து மழை வேகமாக பெய்தது. இதனால் சாலையோரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள், பழக்கடைகள், பூக்கடைகள், பலகாரக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்