கல்வராயன்மலையில் கொட்டித்தீர்த்த கனமழை: கோமுகி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கல்வராயன்மலையில் கொட்டித்தீர்த்த கனமழையால் கோமுகி அணையில் இருந்து 15 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை அடிவாரத்தில் 46 அடி கொள்ளளவு கொண்ட கோமுகி அணை உள்ளது. அணையின் நீர்மட்டம் 44 அடியை எட்டியவுடன், அணையின் பாதுகாப்பு கருதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன் மூலம் சுமார் 11 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும்.
அந்த வகையில் கல்வராயன்மலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் 44 அடியை எட்டியது. இதையடுத்து கடந்த 1-ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
கொட்டித்தீர்த்த கனமழை
இந்த நிலையில் கச்சிராயப்பாளையம், கல்வராயன்மலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு முதல் விடியற்காலை வரை விடிய, விடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதுடன், குடியிருப்பு பகுதிகளையும் சூழ்ந்தது.
இந்த மழையால் கல்வராயன்மலை பகுதிகளில் உள்ள கல்படை, பொட்டியம், மாயம்பாடி ஆகிய ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு தண்ணீர் வரத்து அதிகாித்தது. நேற்று அதிகாலை அணைக்கு 15 ஆயிரம் கன அடி நீர்வரத்து இருந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி 15 ஆயிரம் கன அடி தண்ணீர் பாசன வாய்க்கால் வழியாக கோமுகி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை
இதனால் கோமுகி ஆற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டபடி பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், அணை மற்றும் ஆற்றின் கரையோரம் இருக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை முதல் மழை இல்லாத காரணத்தால் கோமுகி அணைக்கு தண்ணீர் வரத்து 4 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இருப்பினும் அந்த 4 ஆயிரம் கன அடி தண்ணீரும் அப்படியே வௌியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் வெள்ளிமலை, ஆரம்பூண்டி, தொரடிப்பட்டு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளிமலை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக படகு குழாமில் இருந்த படகுகள் தண்ணீரில் மூழ்கின.