சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மீண்டும் கனமழை - ஜிஎஸ்டி சாலையில் ஊர்ந்து செல்லும் வாகனங்கள்
தொடர் மழையால் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது.
சென்னை,
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் இன்று முதல் வருகிற 3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி , எழும்பூர், வேப்பேரி, ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, ஆலந்தூர், வடபழனி, அசோக் பில்லர், கோயம்பேடு, தி.நகர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, போரூர், தாம்பரம், வில்லிவாக்கம், அம்பத்தூர், ஆவடி, வண்டலூர், மறைமலைநகர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் மழை நீர் குளம்போல் தேங்கி உள்ளது. தேங்கி நிற்கும் மழைநீரில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன. மேலும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.