காரைக்குடி ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் ரெயில்களை எரித்து போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Update: 2022-06-18 17:11 GMT

காரைக்குடி, 

அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் ரெயில்களை எரித்து போராட்டம் நடத்தப்பட்டு உள்ளது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

அக்னிபத் திட்டம்

மத்திய அரசின் சார்பில் இந்திய ராணுவத்திற்கு 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஆட்சேர்க்கும் முறையில் அக்னிபத் என்ற குறுகிய கால பணிக்காக புதிய திட்டத்தை அறிவித்தது. இதை வடமாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பீகார், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களில் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்களை தீ வைத்து எரித்து தங்களது போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக வடமாநிலங்களில் வன்முறை ஏற்பட்டு துப்பாக்கி சூடு சம்பவமும் நடந்துள்ளது.

இந்நிலையில் இச்சம்பவத்தை தொடர்ந்து தென்னக ரெயில்வே சார்பில் ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி ஆகிய ரெயில் நிலையங்களில் மத்திய ரெயில்வே பாதுகாப்பு படையினர், ரெயில்வே போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரும் ரெயில் திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை வழியாக ராமேசுவரம் வரை செல்கிறது. குறிப்பாக பல்லவன், சேது விரைவு உள்ளிட்ட தினசரி ரெயில்களும், வாரந்திர ரெயில்கள், பயணிகள் ரெயில்கள் உள்பட 15-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இந்த வழித்தடத்தில் சென்று வருகிறது. இந்த ரெயில்களில் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஏராளமானோர் ராமேசுவரத்திற்கு சென்று வருவதால் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட ரெயில்களில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காரைக்குடியில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேவுகன் தலைமையில் போலீசார் ரெயில்களில் வரும் பயணிகளை சோதனை செய்தும், அவர்களின் உடைமைகளை சோதனை செய்தும் வருகின்றனர். மேலும் ரெயில்களில் வரும் வடமாநிலத்தவர்களையும் கண்காணித்து அவர்கள் செல்லும் ஊர், பெயர் விவரம் குறித்தும் சோதனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்