வால்பாறையில் கடும் பனிமூட்டம்

வால்பாறையில் தொடர் மழையால் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

Update: 2022-11-12 19:00 GMT

வால்பாறை

வால்பாறையில் தொடர் மழையால் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.

கடும் பனிமூட்டம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக வால்பாறையில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. தொடர்மலையின் காரணமாக நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்தபடி வாகனங்களை இயக்கி சென்றனர்.

அதிகாலை முதலே மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக வால்பாறையில் கடும் குளிர்நிலவியதால் பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கினர். ேமலும் அட்டகட்டி பகுதியில் உள்ள ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தொடர் மழையால் சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை

வால்பாறை பகுதியை பொறுத்தவரை கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் மட்டுமே பனிமூட்டம் நிலவுவது வழக்கம். ஆனால் தற்போது பெய்து வரும் மழையால் வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் ஆழியாறு முதல் வால்பாறை வரை பனிமூட்டம் நிலவி வருகிறது.

எனவே வால்பாறை பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களை கவனமுடன் இயக்க வேண்டும். மிதமான வேகத்தில் சாலையில் உள்ள அறிவிப்பு பலகை மற்றும் வெள்ளை கோடுகளை கவனித்து வாகனங்களை இயக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளுக்கு வால்பாறை போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்