கோடநாடு காட்சி முனையில் கடும் பனிமூட்டம்
கோடநாடு காட்சி முனை பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கோத்தகிரி,
கோடநாடு காட்சி முனை பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவியது. இதனால் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
கோடநாடு காட்சி முனை
கோத்தகிரி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் கோடநாடு காட்சிமுனை முக்கியமான ஒன்றாகும். கடல் மட்டத்தில் இருந்து 6,500 அடி உயரத்தில் அமைந்து உள்ளது. கோடநாடு காட்சி முனையில் இருந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க காட்சி கோபுரம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து தொலைநோக்கி மூலம் சமவெளி பகுதியில் உள்ள பவானிசாகர் அணை, பவானி ஆறு, தெங்குமரஹாடா கிராமம், மேட்டுப்பாளையம் போன்ற பகுதிகள், ரங்கசாமி மலைச்சிகரம், அங்குள்ள நீர்வீழ்ச்சி, மேற்கு தொடர்ச்சி மலை உள்ளிட்டவற்றை கண்டு ரசிக்க முடியும்.
ஆண்டு முழுவதும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்த காட்சி முனைக்கு வந்து இயற்கை அழகை கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்து விட்டு செல்கின்றனர். கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.
இயற்கை காட்சிகள்
இந்தநிலையில் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கடும் குளிரான கால நிலை நிலவி வருகிறது. நேற்று முன்தினம் கோடநாடு காட்சி முனையை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வருகை தந்தனர். அங்கு பரவலாக மழை பெய்தது. அப்பகுதியில் கடும் பனிமூட்டம் நிலவியது.
இதனால் காட்சி முனையில் இருந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க முடியவில்லை. மேலும் தொலைநோக்கியில் இருந்து சமவெளி பகுதிகளை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் கடும் குளிரால் அவதியடைந்தனர். இதனால் கோடநாடு காட்சி முனையில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.