சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை 20-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
போலீஸ் காவல் விசாரணை முடிந்ததால் சவுக்கு சங்கர் மீண்டும் சிறையில் அடைப்பட்டார்.
கோவை,
போலீஸ்அதிகாரிகள் மற்றும் மகளிர் போலீசார் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக யூடியூபர் சவுக்கு சங்கர் மீது கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் மீது சென்னையில் அடுத்தடுத்து வழக்குகள் பதிவானதால் சென்னை பெருநகர காவல்துறை சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது.
சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை சைபர் கிரைம் போலீசார் கோவை 4-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனு மீது விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட்டு சரவணபாபு, சவுக்கு சங்கரை ஒருநாள் மட்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்தார். இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அவரை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள்.
பின்னர் விசாரணை முடிந்ததும் நேற்று மாலையில் போலீசார் பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை கோவை கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். பின்னர் மாஜிஸ்திரேட்டு சரவணபாபு முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். அப்போது சவுக்கு சங்கர், தன்னை வேறு அறைக்கு மாற்ற வேண்டும் என்று மாஜிஸ்திரேட்டுவிடம் கோரிக்கை விடுத்தார்.
அதை கேட்ட மாஜிஸ்திரேட்டு, உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள், சட்ட உதவி மையம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதையடுத்து சவுக்கு சங்கரை வருகிற 28-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட்டு சரவணபாபு உத்தரவிட்டார். இதை தொடர்ந்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் சவுக்கு சங்கரை அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
முன்னதாக இந்த வழக்கில் ஜாமீன் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, அந்த மனு மீதான விசாரணையை வருகிற 20-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.